பாகிஸ்தானின் விமானங்களை வீழ்த்தியதாக இந்திய ஆகாயப் படைத் தளபதி கூறியதை அனைத்துலக நிபுணர் ஒருவர் ஆதரித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது அதன் ஐந்து விமானங்களையும் முன்கூட்டியே எச்சரிக்கும் பெரிய விமானம் ஒன்றையும் சுட்டு வீழ்த்தியதாக இந்திய ஆகாயப் படைத் தளபதி அமர் பிரீத் சிங் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
இப்போது அதற்கு ஆதரவாக ஆஸ்திரியாவைத் தளமாகக் கொண்ட ஆகாயப் போர் ஆய்வு நிபுணர் டோம் கூப்பர் கருத்துக் கூறியிருக்கிறார்.
இந்தியத் தளபதி சொன்னது கிட்டத்தட்ட மே மாதத்திலிருந்து தெரிந்த தகவலை உறுதிப்படுத்தும் ஒன்றுதான் என்றார் அவர்.
மண்ணிலிருந்து விண்ணுக்குப் பாயும் எஸ்-400 ரக ஏவுகணை, 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கியதாக இந்தியத் தளபதி கூறியதையும் திரு டோம் அங்கீகரித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இவ்வாண்டு மே மாதம் 7ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை நடந்த போரில் இந்திய ஆகாயப் படையின் கை ஓங்கியிருந்ததாக அவர் சொன்னார். ஏஎன்ஐ செய்தி ஊடகத்துக்குத் திரு டோம் பேட்டியளித்தார்.