தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய அறிவியல் வல்லுநருக்கு அனைத்துலக நீர் விருது

1 mins read
3f2f770f-0f7a-4029-b442-51c4af744dad
அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியரான டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி. - படம்: இந்திய ஊடகம்

புனே: மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் ஹிமான்ஷு குல்கர்னி அனைத்துலக நீர் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைத் தேடிக்கொண்டார்.

அமெரிக்காவில் உள்ள ஒக்லாஹோமா பல்கலைக்கழகத்தினுடைய நீர் நிலையத்தின் ஆதரவில் கடந்த 2009ஆம் ஆண்டுமுதல் ஈராண்டுகளுக்கு ஒருமுறை இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

உலகில் வளர்ந்துவரும் துறைகளில் நீர் விநியோகத்திலும் துப்புரவிலும் அர்ப்பணிப்புடன் செயல்படுவோருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

கடந்த 2024ஆம் ஆண்டிலேயே டாக்டர் குல்கர்னிக்கு விருது அறிவிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கப்பட்டது.

நிதி ஆயோக் அமைப்பின் 12வது திட்டத்திற்கான ஒரு பணிக்குழுவின் இணைத்தலைவராகச் செயல்பட்ட இவர், தேசிய நீர்நிலை வரைவுத் திட்டத்தை வடிவமைப்பதில் பங்களித்துள்ளார்.

நீர்வள உருவாக்க, மேலாண்மைக்கான நவீன நிலையத்தின் (அக்வாடேம்) நிறுவனரும் செயலாளருமான டாக்டர் குல்கர்னி, பல்வேறு உயர்கல்வி நிலையங்களின் வருகைதரு பேராசிரியராகவும் இருக்கிறார்.

சமூகப் பங்காளித்துவத்துடன் நிலத்தடி நீர் மேலாண்மையை ஊக்குவிக்க அக்வாடேம் அமைப்பு மேற்கொண்ட பல்வேறு பங்களிப்புகளின், ஒத்துழைப்புகளின் வெளிப்பாடே இவ்விருது என்று அவர் குறிப்பிட்டார்.

அனைத்துலக நீர் விருதானது பரிசுக் கிண்ணத்தையும் 25,000 (S$32,350) அமெரிக்க டாலர் ரொக்கத்தையும் உள்ளடக்கியது.

குறிப்புச் சொற்கள்