பெங்களூரு: அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் 150க்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட மோசடி தொடர்பாக, பெங்களூரு காவல்துறை விசாரித்து வருகிறது.
கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் வெளியான ஒரு விளம்பரத்தில் அதிபர் டிரம்ப்பின் படம் இடம்பெற்றிருந்ததுடன், ‘குறுகிய நாட்களில் அதிக பணம் சம்பாதிக்கலாம்’ என்ற வாசகமும் காணப்பட்டது.
மேலும், ‘வீட்டில் இருந்தபடியே பணியாற்றலாம்’, ‘முதலீடு செய்யும் தொகையை இரட்டிப்பாக்கலாம்’ என்றெல்லாம் கூடுதலாக சில கவர்ச்சி அறிவிப்புகளும் காணப்பட்டன.
இதை உண்மை என நினைத்து, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கைப்பேசி எண்களை தொடர்புகொண்டு பேசியபோது, எதிர்முனையில் இருந்தவர், ‘எல்லாம் உண்மைதான்’ எனக் கூறி, குறிப்பிட்ட செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அவர் அவ்வாறு செய்தபோது, வாடிக்கையாளர்களின் முதலீட்டுக்கு லாபம் கிடைத்ததாக அச்செயலி காட்டியது. ஆனால், எந்தத் தொகையையும் எடுக்க முடியவில்லை.
பின்னர் லாபத்தொகைக்கு வரி செலுத்த வேண்டும் என்று கூறியதை நம்பி, மேலும் பலர் பணம் செலுத்தினர்.
ஆனால், செலுத்திய பணத்தை மட்டும் யாராலும் கணக்கில் இருந்து எடுக்க முடியவில்லை. பின்னர், விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கைப்பேசி எண்களை தொடர்புகொள்ள முடியவில்லை.
இதுதொடர்பாக 150க்கும் மேற்பட்டோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அமெரிக்க அதிபரின் படத்துடன் உருவான காணொளியை, சமூக ஊடகங்களில் வெளியிட்டு மோசடி நடந்துள்ளது தெரியவந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்துள்ள விரிவான புகாரின் பேரில் கர்நாடக காவல்துறையினர் இணையக் குற்றப்பிரிவு அதிகாரிகள் இந்த மோசடி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
அண்மைக்காலமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் போலி காணொளிகளை வெளியிட்டு மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.

