மும்பை: இந்தியாவின் வர்த்தகத் தலைநகரம் எனக் குறிப்பிடப்படும் மும்பையில், கடந்த இரு நாள்களாகப் பெய்து வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மும்பையில் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.
ஒட்டுமொத்த மும்பை மாநகரமும் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், அங்கு ரயில், விமானப் போக்குவரத்துகளும் முடங்கியுள்ளன.
நகரின் எந்தப் பகுதியாக இருப்பினும், அங்கு மழைநீர்த் தேங்கியுள்ளது. தென்மேற்குப் பருவ மழை முன்கூட்டியே தொடங்கியதால்தான், மும்பையில் பலத்த மழை பெய்துவருவதாகக் கூறப்படுகிறது.
மே மாதத்தில் மட்டும், இதுவரை 295 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. இது 100 ஆண்டுகளில் பதிவான அதிக மழைப்பொழிவு என இந்திய வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது. மேலும், ‘அதிக மழைப்பொழிவு’ என்று வானிலை ஆய்வு நிலையம் வகைப்படுத்தியுள்ளது.
மும்பையில் பல இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் ஏராளமான மரங்கள் முறிந்து சாய்ந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில மெட்ரோ நிலையங்களும் மழைநீரில் மூழ்கின. மும்பையின் உயிர்நாடி எனக் கருதப்படும் புறநகர் மின்சார ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
கனமழையால் விமானப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. மும்பை நோக்கி வந்த பல விமானங்கள் கோவா, இந்தூருக்குத் திருப்பி விடப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே, பேருந்து, ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டதால் மும்பைவாசிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
நீலகிரியில் நீடிக்கும் சிவப்பு எச்சரிக்கை:
இதற்கிடையே, தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
அங்கு பல இடங்களில் மரங்கள் விழுந்து, மின் கம்பிகள் அறுந்துள்ளதால் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், இணைய, தொலைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கீழே விழுந்த மரங்களை தீயணைப்பு, காவல்துறையினர் வெட்டி அகற்றி போக்குவரத்தைச் சீரமைத்து வருகின்றனர்.
ஏராளமான பழங்குடியினர் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை (மே 26) காலை 6 மணி வரை கூடலூர் 153 மிமீ, தேவாலா 63 மிமீ மழை அளவு பதிவானது. நீலகிரி மாவட்டத்துக்கு தொடர்ந்து அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை நீடித்து வருவதாக வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது.