புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள்மீது அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியிருக்கிறது.
இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட நிறுவனமொன்று இந்தியாவுடன் தொடர்பிலிருந்ததாகவும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை மாற்றிவிட்டதாகவும் சந்தேகிக்கப்படுவதன் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படுகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா சனிக்கிழமை (நவம்பர் 7) இந்தத் தகவலை வெளியிட்டது.
அந்த நிதி, ஜெர்மனி, துபாய், லித்துவேனியா, கனடா, செயின்ட் கிட்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் வழியாகப் பல கட்டப் பரிவர்த்தனைகள்மூலம் இந்தியாவில் உள்ள அமைப்புகளையும் தனிநபர்களையும் சென்றடைந்துள்ளது.
செயின்ட் கிட்ஸ், நெவிஸ் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட டிசிசி டிஜிட்டல் மார்க்கெட்ஸ் நிறுவனம் இந்த நிதியை அனுப்பியதாக அமலாக்கத்துறை அடையாளம் கண்டுள்ளது.
ஜெர்மனியின் டாக்டர் மத்தியாஸ் கார்ல் வோக்ட் அறக்கட்டளையே இந்த ஒரு மில்லியன் டாலர் நிதியின் உண்மையான மூலம் எனத் தெரியவந்துள்ளது. ஜெர்மன் சட்டத்தைத் தவிர்க்கும் நோக்கில், அந்த அறக்கட்டளை முதலில் லித்துவேனியாவின் எக்ஸ்பேஸ் டிஜிட்டல் யுஏபி நிறுவனத்திற்குப் பணத்தை மாற்றியதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
அந்தத் தொகை மின்னிலக்க நாணயமாக வழங்கப்பட்டதாக டாக்டர் மத்தியாஸ் வோக்ட் தேதியிடப்படாத கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத ஹவாலா முறையில் துபாய்க்கும் லித்துவேனியாவுக்கும் இந்தச் சொத்துகள் மாற்றப்பட்டு, பின்னர் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டதாக உளவுத் தகவல் தெரிவிக்கிறது.
பிரிட்டன் நிறுவனம் இவ்வாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில், அதன் ஏர்வால்லெக்ஸ் கணக்கில் அந்த ஒரு மில்லியன் டாலர் நிதியைப் பெற்றது. செயின்ட் கிட்ஸ் நிறுவனத்திடமிருந்து மானியம் என்ற பெயரில் அந்தப் பணம் இரண்டு தவணைகளாக அனுப்பப்பட்டது.
பொருளியல் ரீதியாக உலக அளவில் இயங்கும் மோசடிக்காரர்கள் சட்டவிரோதப் பணத்தை மாற்றப் பயன்படுத்தும் வரிப் புகலிடமாக அந்தக் கரீபியன் தீவு அறியப்படுகிறது.
இதற்கிடையே, கனடாவின் இசட்பேஸ் டிஜிட்டல் நிறுவனம் அதே பிரிட்டன் கணக்கிற்கு 500,000 டாலர் அனுப்பிய மற்றொரு பரிவர்த்தனையையும் அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. சந்தேகத்திற்குரிய இந்த இரண்டு பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 1.5 மில்லியன் டாலர்.
இந்த விவரங்களை இந்தியப் புலனாய்வு அமைப்புகள் தற்போது ஏர்வால்லெக்ஸ் நிறுவனத்திடம் சரிபார்த்து வருகின்றன.
