இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு

2 mins read
e876edb1-6029-49d0-afc4-84e2df7520f6
வியாழக்கிழமை இந்​தி​யச் சந்​தை​யில், பல்வேறு உலகளா​விய அரசி​யல் பதற்​றங்​களின் தாக்கத்தை உணர முடிந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர். - படம்: தினமணி

மும்பை: வியாழக்கிழமை (பிப்ரவரி 19) இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை எதிர்கொண்டன. இதன் எதிரொலியாக முதலீட்​டாளர்​களுக்கு ஒரே நாளில் ரூ.8 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாக புள்​ளி​விவரங்​கள் தெரிவிக்​கின்​றன.

பங்குச் சந்தைகளில் பங்குகளின் மதிப்பு ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க பல்வேறு காரணிகள் உள்ளன. எனினும் இவற்றுள் பெரும்பாலான காரணிகள் கட்டுக்குள் இருப்பது வழக்கம்.

இந்நிலையில், வியாழக்கிழமை இந்​தி​யச் சந்​தை​யில், பல்வேறு உலகளா​விய அரசி​யல் பதற்​றங்​களின் தாக்கத்தை உணர முடிந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

குறிப்​பாக அமெரிக்கா, ஈரான் இடையி​லான மோதல் போக்கு அதி​கரித்​துள்​ளது உலக முதலீட்டாளர்​களைக் கவலை​யடையச் செய்​துள்​ளது.

இதனால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழலால் ஏராளமான முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள பங்குகளை விற்கத் தொடங்கியதாகவும் இதன் மூலம் தங்​களுக்​குக் கிடைத்த லாபத்தை உறுதி செய்ய அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தெரிகிறது.

ஒரு கட்டத்தில் இந்த விற்​பனை வேகம் எடுத்​ததாகவும், தொழில்​நுட்ப ரீதி​யாக பங்குச்சந்தை அதன் முக்​கிய நிலைகளைக் கடந்த குறி​யீடு கீழே இறங்கியதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில், வியாழக்கிழமை மும்பை பங்​குச்​சந்தைக் குறி​யீட்டு எண்​ணான சென்​செக்ஸ் 1,236.11 புள்​ளி​கள் சரிந்து 82,498.14 என்ற அளவில் நிலைபெற்​றது.

அதே​போல், தேசிய பங்​குச்சந்தைக் குறி​யீட்டு எண்​ணான நிஃப்டி 365 புள்​ளி​கள் சரிந்து 25,454.35ல் நிலைகொண்​டது.

மும்பை பங்​குச் சந்​தை​யில் பட்​டியலிடப்​பட்​டுள்ள நிறு​வனப் பங்​கு​களின் ஒட்​டுமொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ.472 லட்​சம் கோடி ஆகும். வியாழக்கிழமை ஏற்பட்ட இழப்புக்குப் பின்னர், மொத்த மூலதன மதிப்பு ரூ.464 லட்​சம் கோடி​யானது. இதன் மூலம் ஒரே நாளில் முதலீட்​டாளர்​களுக்கு ரூ.8 லட்​சம் கோடி இழப்​பு ஏற்​பட்​டது.

இது தற்காலிக இழப்பு என்று முதலீட்டாளர்களில் ஒரு தரப்பினர் நம்புகின்றனர். அதேசமயம், சந்தையில் நிலவும் சூழல் கவலை அளிப்பதாக மற்றொரு தரப்பினர் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்