புதுடெல்லி: எண்ணெய் இறக்குமதியில் ஆகப் பெரிய உலக நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திலுள்ள இந்தியா, கடந்த 2019 மே மாதத்திற்குப் பிறகு ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யாமல் இருந்து வந்தது.
இந்தச் சூழலில், இப்போது ஈரானிடமிருந்து மீண்டும் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலிய, இயற்கை எரிவாயு அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளுக்கு மத்தியில், இந்தியச் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்க்கான தேவையைப் பூர்த்தி செய்துள்ளன.
“மேலும், ஈரான் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பணப்பரிமாற்றத் தடைகள் ஏதுமில்லை,” என்று மத்திய பெட்ரோலிய இயற்கை எரிவாயு அமைச்சு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம், அனைத்துலக அளவில் நிலவும் எண்ணெய்த் தட்டுப்பாட்டைப் போக்க ஈரான்மீதான தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியது.
இதன்மூலம், இந்தியா இப்போது வங்கிகள் வழியாக ஈரானுக்குப் பணம் செலுத்துவதில் இருந்த பணப்பரிமாற்றத் தடைகள் (Payment Hurdles) நீங்கியுள்ளதால், கச்சா எண்ணெய் வாங்குவது எளிதாகியுள்ளது.
இந்தியா 40க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது என்றும் வணிக ரீதியான முடிவுகளின் அடிப்படையில் பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய்யைப் பெறுவதற்கான முழுச் சுதந்திரம் இந்திய நிறுவனங்களுக்கு இருப்பதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, ஈரானிலிருந்து 44,000 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயு ஏற்றப்பட்ட கப்பல் ஒன்று கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 1) மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தது.
தற்போது அங்கிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

