திருவனந்தபுரம்: முதன்முறையாக தானே முழுமையாக ஏற்று நடத்தும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை 2027ஆம் ஆண்டில் செயல்படுத்த இந்தியா ஆயத்தமாகி வருகிறது.
அத்திட்டத்தைச் சரியான நேரத்தில் நிறைவேற்றும் பணிகள் நடந்துகொண்டிருக்கும் வேளையிலும் இஸ்ரோ எனும் இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் இந்த நிதியாண்டு நிறைவடைவதற்குள் மேலும் ஏழு விண்கலன்களைப் பாய்ச்சத் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் வி. நாராயணன் கூறியுள்ளார்.
அறிவியல், தொழில்நுட்பம், தொழில்துறை ஆற்றலில் பெரிய அளவில் மேம்பாடு காண்பதற்கு இஸ்ரோ தயாராகி வருவதாக பிடிஐ ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் திரு நாராயணன் தெரிவித்தார். அதற்கான திட்டங்களில் பல்வேறு பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி (PSLV, GSLV) திட்டங்கள், வர்த்தகத் தொடர்பு செயற்கைக்கோள்கள் ஆகியவையும் அடங்கும்.
அதிலும் முதன்முறையாக முழுமையாக இந்தியாவில் உற்பத்தியாகிவரும் பிஎஸ்எல்வி திட்டம் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், சந்திரயான்-4 திட்டத்துக்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துவிட்டதாக திரு நாராயணன் குறிப்பிட்டார். அது, இந்தியா இதுவரை மேற்கொண்டிராத ஆக சவாலான நிலவுப் பயணமாகும்.
“சந்திரயான்-4ஐ 2028ஆம் ஆண்டு நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளோம்,” என்றார் திரு நாராயணன்.
இஸ்ரோ மேற்கொள்ளும் மற்றொரு முக்கியமான விண்வெளித் திட்டம் லூப்பெக்ஸ் (LUPEX). அது, இஸ்ரோவும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு அமைப்பான ஜேக்சாவும் இணைந்து நடத்தும் நிலவு ஆய்வுத் திட்டமாகும்.
அதோடு, அடுத்த மூவாண்டுகளில் தங்களின் விண்கலன் உற்பத்தியை ஆண்டுதோறும் மும்மடங்காக்கும் இலக்கை இந்தியா கொண்டுள்ளது. இஸ்ரோ கூடுதல் விண்வெளித் திட்டங்களை மேற்கொண்டுவருவதால் அதற்கு ஈடுகொடுக்க மின்கலன் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
நிலவிலிருந்து வடிவங்களைக் (samples) கொண்டுவருவது சந்திரயான்-4 திட்டத்தின் இலக்காகும். இந்த ஆற்றல், தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவற்றிடம்தான் உள்ளது.
இந்திய விண்வெளி நிலையத்தை 2035ஆம் ஆண்டுக்குள் அமைத்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை இஸ்ரோ தற்போது மேற்கொண்டு வருகிறது.
“ஐந்து அம்சங்களின் முதல் அம்சம் 2028ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிறைவேற்றப்படும்,” என்று திரு நாராயணன் தெரிவித்தார்.

