தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

1 மில்லியனுக்கும் அதிகமான இந்தியருக்கு குடியேற்றமல்லாத விசா: அமெரிக்கா

2 mins read
695a540b-fcdb-4d3e-a1fa-99e292effd24
2025ல் அமெரிக்காவில் வசிப்போரின் எச்-1பி விசாக்களை அங்கேயே புதுப்பிக்கும் திட்டத்தையும் அமெரிக்கா முன்னெடுத்துள்ளது. - கோப்புப் படம்: இணையம்

புதுடெல்லி: தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, சாதனை எண்ணிக்கையிலான வருகையாளர் விசாக்கள் உட்பட ஒரு மில்லியனுக்கும் அதிகமான குடியேற்றம் அல்லாதோருக்கு விசாக்களை வழங்கியதாக இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதகரம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா செல்ல அதிகமான இந்தியர்கள் விழைவதை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) தூதகரம் வெளியிட்ட அறிக்கை சுட்டியது.

2025ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வசிப்போரின் எச்-1பி விசாக்களை அங்கேயே புதுப்பிக்கும் திட்டத்தையும் அமெரிக்கா முன்னெடுத்துள்ளது. இது கணிசமான எண்ணிக்கையிலான இந்தியர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில், இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்வோரின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. 2024ன் முதல் 11 மாதங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவுக்குப் பயணம் செய்துள்ளனர். இது 2023ன் அதே காலகட்டத்தைவிட 26 விழுக்காடு அதிகமாகும்.

ஏற்கெனவே, ஐந்து மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்கா செல்ல குடியேற்றம் அல்லாத விசாவைப் பெற்றுள்ளனர். மேலும், ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு விசா வழங்கப்படுகிறது என்று தூதரகம் கூறியது.

அமெரிக்க மாநிலங்களில் எச்-1பி விசாக்களை புதுப்பிப்பதற்கான முன்னோடித் திட்டத்தை வெளியுறவுத்துறை இந்த ஆண்டு மேற்கொண்டது. இதன்மூலம் சிறப்பு நிபுணத்துவ இந்திய ஊழியர்கள் அமெரிக்காவிலேயே தங்களது விசாவை புதுப்பித்துக்கொள்ளலாம்.

“இந்த முன்னோடித் திட்டம் புதுப்பிப்பு நடைமுறையை சீரமைத்தது. 2025ல் அமெரிக்காவில் புதுப்பிக்கும் திட்டத்தை முறையாக நிறுவ அரசுத் துறை பணியாற்றி வருகிறது,” என்று அது கூறியது.

சட்டபூர்வமாக குடும்பத்துடன் இணைவதற்கும் திறமையான தொழில் வல்லுநர்கள் இடம்பெயர்வதற்கும் உதவும் வகையில் பல்லாயிரக்கணக்கான குடியேற்ற விசாக்களும் வழங்கப்பட்டுள்ளன. குடியேற்ற விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்கா சென்றவுடன் நிரந்தரவாசிகளாகலாம்.

மேலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக இந்திய மாணவர்கள் அமெரிக்க மாணவர் விசாவைப் பெற்றுள்ளதையும் அது சுட்டியது. 2008 / 2009 கல்வியாண்டிற்குப் பிறகு முதல் முறையாக 2024ல் அமெரிக்கா சென்ற அனைத்துலக மாணவர்களில் ஆக அதிகமானவர்கள் இந்தியர்களாக இடம்பெற்றனர். மொத்தமாக 331,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தற்போது அமெரிக்காவில் படிக்கின்றனர்.

இரண்டாவது ஆண்டாக அமெரிக்காவுக்கு அனைத்துலக பட்டதாரி மாணவர்களை அதிக அளவில் அனுப்பும் நாடாகவும் இந்தியா உள்ளது. இந்திய பட்டதாரி மாணவர் எண்ணிக்கை 19 விழுக்காடு அதிகரித்து கிட்டத்தட்ட 200,000 ஆகியுள்ளது.

“பல பரிமாற்றத் திட்ட வருகையாளர்கள் தற்போது அமெரிக்காவில் தங்கள் திட்டங்களை முடித்த ஈராண்டுகளில் நாடு திரும்ப வேண்டிய கட்டாயமில்லை. அவர்கள் அங்கு வாழ்க்கைத்தொழில் கல்வியை மேலும் மேம்படுத்த அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன,” என்று தூதரகம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்