தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவதே சிறந்தது: ஸ்டாலின்

2 mins read
58b1567a-6f06-49ad-b607-b80e86e44545
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எழுதிய ‘தேசிய கல்விக்கொள்கை 2020 எனும் மதயானை’ என்னும் நூலை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் மே 17ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜய்சிங், உச்​ச நீ​தி​மன்ற முன்னாள் நீதிபதி வெ.கோபால கவுடா. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தேசியக் கல்விக்கொள்கை இட ஒதுக்கீட்டைச் சிதைத்து விடும். எனவே, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கு நாம் போராட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை-2020 எனும் மதயானை’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.

இதில் தலைமை விருந்தினராக பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட்டார். மேலும், சிறப்பு விருந்தினர்களாக அவ்விழாவில் கலந்துகொண்ட மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வெ.கோபால கவுடா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அதன்பின் முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக வேல் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “எப்போதும் கொள்கையை விட்டுத் தரமாட்டோம். தமிழகத்தின் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்பதற்கு அடையாளம்தான் இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகத்தின் தலைப்பே மொத்தக் கருத்தையும் சொல்லிவிட்டது. இப்படியொரு கல்விக்கொள்கையை மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு உருவாக்கியபோதே கல்வியில் சிறந்த தமிழகத்தை நாசப்படுத்திட மாட்டோம் என்று அன்றே கருணாநிதி எதிர்த்தார். கருணாநிதியின் வரிகளையே அமைச்சர் மகேஸ் புத்தகத்தின் தலைப்பாக மாற்றியுள்ளார்

பாஜகவின் திட்டங்கள், எதிர்கால நோக்கங்கள் எல்லாவற்றையும் பார்த்துதான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் எனத் திட்டவட்டமாகக் கூறுகிறோம்.

தேசிய கல்விக் கொள்கை இடஒதுக்கீட்டை சிதைத்துவிடும். பன்முக பண்பாட்டைத் தகர்த்துவிடும். சமஸ்கிருதத்தை மட்டும் கொண்ட ஒற்றை தேசமாக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே நோக்கம்.

தேசிய கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் வளரும் என்று சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். எது நடக்கும் என்று நாம் தொடர்ந்து எச்சரித்தோமோ, அதை உள்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அழிக்கும் முயற்சி இது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், “கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவருவதே சிறந்தது. அதற்கான போராட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும். இல்லையெனில் கல்வி எல்லாருக்கும் எட்டாக்கனியாக மாறிவிடும்.

மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் தமிழக அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய ரூ.2,150 கோடியை வழங்க மறுக்கிறது.

எனவே மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். இந்த வழக்கிலும் வெற்றி பெறுவோம்,” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்