புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இந்தியா செல்வது சந்தேகம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் நடைபெறும் குவாட் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை கடந்த ஜூன் மாதம் திரு டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் இந்தியா செல்வது சந்தேகம் என்று நியூயார்க் டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
இதுவரை புதுடெல்லியோ வாஷிங்டனோ இதனை உறுதிப்படுத்தவில்லை.
இரு நாடுகளும் குவாட் உச்சநிலை மாநாட்டில் இருதரப்பு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதி உடன்பாடு செய்துகொள்ளும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இதில் பின்னடைவு ஏற்பட்டது.
கடந்த பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பல நாடுகளுக்கு வரி விதிப்புகளை அறிவித்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அப்போது அமெரிக்காவோடு பேச்சு நடத்த முன்வந்த முதல் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதாகக் கூறி இந்தியா மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25 விழுக்காடு வரிக்கு மேலும் 25 விழுக்காடு வரியை டிரம்ப் விதித்தார்.
இது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு நடத்துவதையும் அமெரிக்கா நிறுத்திக்கொண்டது. மேலும், ஆகஸ்ட் 25ஆம் தேதி மற்றொரு சுற்றுப் பேச்சுக்குத் தனது குழுவை அனுப்பவும் அமெரிக்கா மறுத்துவிட்டது.
இந்நிலையில், அதிபரின் நிகழ்ச்சி நிரலைப் பற்றி அறிந்தவர்கள், திரு டிரம்ப்பிடம் இந்தியா செல்வதற்கான எந்தத் திட்டமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
அமெரிக்கா விதித்த 50 விழுக்காடு வரியை, எவ்வளவு போட்டாலும் தாங்கிக் கொள்வோம் என்பதுபோல கூறி இந்தியா அடிபணிய மறுத்துவிட்டது.
அண்மையில் எதிரும் புதிருமாக இருந்த இந்தியாவும் சீனாவும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் நெருக்கத்தைக் காட்டியிருந்தன.
இதனால், அமெரிக்க அதிபர் வெறுப்படைந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
‘குவாட்’ அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. செப்டம்பரில் இதன் உச்சநிலை மாநாடு இந்தியாவில் நடைபெறுவதாக இருக்கிறது.