மும்பை: புகழ்பெற்ற இந்தி நடிகர் டைகர் ஷெராஃப்மீது தாக்குதல் நடத்த மும்பை சென்ற துப்பாக்கிக்காரர்கள் மூவர் குறித்துப் புதிய தகவலைக் காவல்துறை வெளியிட்டுள்ளது.
அம்மூவரும் மும்பையில் தங்கியிருந்த ஒருமாத காலத்தில் இந்தித் திரையுலகப் பிரபலங்கள் அமீர் கான், சல்மான் கான், ரன்வீர் சிங் ஆகியோர் வசிக்கும் கட்டடங்களை நேரில் சென்று பார்வையிட்டு நோட்டம் விட்டது விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
நடிகர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தவே குற்றக் கும்பல் அவர்களை அனுப்பியதா அல்லது ஆர்வத்தின் காரணமாக அவர்கள் அந்த இடங்களுக்குச் சென்றார்களா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
“புகழ்பெற்றோர் வசிக்கும் கட்டடங்களை அவர்கள் பார்வையிட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அமீர் கானின் வீடு டைகர் ஷெராஃப்பின் வீட்டிற்குச் சற்றுத் தொலைவில் உள்ளதால், குறிப்பிட்டு யாரையும் தாக்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனரா என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும்,” என்றும் தகவலறிந்த ஒருவர் கூறினார். முன்னெச்சரிக்கையாகச் சில நடிகர்களின் வீடுகளுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஹரியானாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜதின், சமீர் இருவரும் நீதிமன்ற அனுமதிக்குப்பின் கைது செய்யப்படுவர் என்று மும்பைக் குற்றப் பிரிவுத் துணை ஆணையர் ராஜ் திலக் ரௌஷன் புதன்கிழமை (அக்டோபர் 21) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
டைகர் ஷெராஃப் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையோர் சில குழுக்களாகச் செயல்பட்டுள்ளனர். அமிர்தசரஸ் நகரிலிருந்து துப்பாக்கிகளைப் பெற்றுக்கொண்ட மூவர், டெல்லி சென்று அங்குப் பெண்கள் இருவரிடம் அவற்றை வழங்கினர். பின்னர் அவை மும்பையிலிருந்த தாக்குதல்காரர்களுக்குக் கைமாறின.
மேலும், அங்கித் என்பவர் துப்பாக்கிக்காரர்கள் மும்பையில் இடங்களை நோட்டமிட உதவியதுடன், ரூ.2 லட்சம் பணப் பரிவர்த்தனைக்கும் ஏற்பாடு செய்ததாகக் கூறப்பட்டது.
