லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் புதன்கிழமை இரவு திருமண நிகழ்ச்சியில் அழைக்கப்படாத விருந்தாளியாக சிறுத்தை ஒன்று கலந்துகொண்டு பெரும் பீதியை ஏற்படுத்தியது.
அக்சய் ஸ்ரீவஸ்தவா- ஜோதி குமாரியின் திருமணத்துக்கு சிறுத்தை வந்ததைக் கண்டு, விருந்தினர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அலறியடித்து ஓடினார்கள்.
இச்சம்பவம் புதன்கிழமை (பிப்ரவரி 12) இரவு 11 மணியளவில் லக்னோ நகரில் நடந்துள்ளது.
காதல், மகிழ்ச்சி, இசையால் நிரம்பிய ஒரு திருமணமானது, சிறுத்தை வந்ததால் திடீரென ஒரு கனவாக மாறிப்போனது.
சில நொடிகளில் அலறல் சத்தம் கேட்டது, விருந்தினர்கள் சாலைக்கு ஓடினர்.
விருந்தினர் ஒருவர் திருமண மண்டபத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து காயம் அடைந்தார்.
மணமகனும், மணமகளும் ஓடிப்போய் ஒரு காருக்குள் தங்களைப் பூட்டிக்கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர் ஒருவர் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வனத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரமாக சிறுத்தையைத் தேடினர்.
தொடர்புடைய செய்திகள்
கடைசியாக முதல் தளத்தில் உள்ள அறை ஒன்றில் பதுங்கியிருந்த நிலையில், சிறுத்தைப்புலி கண்டுபிடிக்கப்பட்டது.
வனத்துறை அதிகாரி முகதர் அலி அந்த விலங்கின் அருகே சென்றபோது, அது பாய்ந்து விழுந்து தனது பாதத்தால் அவரைத் தாக்கியது. இதனால், அந்த வன அதிகாரியின் இடது கை ரத்தத்தில் தோய்ந்தது.
அதிகாலை 3.30 மணியளவில் சிறுத்தை பிடிபடும் வரை நடவடிக்கை தொடர்ந்தது.
திருமண இடத்தில் இருந்து தப்பிப்பதற்காக மாடியில் இருந்து கீழே குதித்ததில் இரண்டு ஒளிப்பதிவாளர்களும் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்பாராத இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மறுநாள் காலையில் திருமணச் சடங்குகள் மீண்டும் தொடங்கின.