தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வர்த்தகத்தை இரு மடங்காக அதிகரிக்க விரும்பும் ஜெர்மனிக்கு ஜெய்சங்கர் பாராட்டு

2 mins read
35c80816-ceab-489c-8fe1-48737c547d86
அமைச்சர் ஜெய்சங்கர். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியா, ஜெர்மனி இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் வர்த்தகத்தை இரு மடங்காக அதிகரிக்க ஜெர்மனி எடுத்துள்ள முடிவு, பாராட்டி வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இருதரப்புக்கு இடையேயான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்றம், தற்காப்புத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜெய்சங்கர், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்றுமதி தொடர்பாக உள்ள கட்டுப்பாடுகளைக் களைவதற்கான நடவடிக்கைகளை ஜெர்மனி முன்னெடுத்தது பாராட்டுக்குரிய என்றார்.

“பகுதி மின்கடத்தி துறையில் இந்தியாவுடன் ஒத்துழைக்க ஜெர்மனி விரும்புவது குறிப்பிடத்தக்கது. மேலும், பசுமையாற்றல் துறையிலும் இரு நாடுகளும் ஒத்துழைக்க ஆர்வம் காட்டுகின்றன. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு தொடர்ந்து வளர்ந்து வருகிறது,” என்றார் ஜெய்சங்கர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜெர்மனி காட்டிய புரிதலை இந்தியா பெரிதும் மதிக்கிறது என்று குறிப்பிட்ட ஜெய்சங்கர், பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக இந்தியா தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமையை ஜெர்மனி வெளிப்படையாக ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இந்தியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் கிட்டத்தட்ட 50 பில்லியன் யூரோக்களை எட்டியது என்பதையும் திரு ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.

“இந்தியாவும் ஜெர்மனியும் அறிவியல் ஒத்துழைப்பில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. இந்தப் பங்காளித்துவத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான விண்வெளி ஒத்துழைப்பைத் தீவிரமாக ஆராய்வதும் அவசியம்,” என்றார் அமைச்சர் ஜெய்சங்கர்.

இதையடுத்துப் பேசிய ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் டேவிட் வடேபுல், இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஜெர்மனி ஆதரவு அளிக்கும் என்றார்.

குறிப்புச் சொற்கள்