ஜம்மு வெள்ளம்: பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார் மத்திய அமைச்சர் அமித் ‌ஷா

2 mins read
e66b8619-a688-4632-9a0d-9ca9b944b307
ஜம்முவில் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ‌ஷா (நடு) தலைமையில் திங்கட்கிழமை (செப்டம்பர் 1) கூட்டம் நடைபெற்றது. அதில் திரு‌ ‌ஷாவுடன் ஜம்மு கா‌‌ஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் (இடம்) முதலமைச்சர் ஒமர் அப்துல்லாவும் (வலம்) மற்ற மூத்த அதிகாரிகளுடன் பங்கேற்றனர். - படம்: எக்ஸ் / இந்திய ஊடகம்

ஜம்மு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ‌ஷா, ஜம்முவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் திங்கட்கிழமை (செப்டம்பர் 1) பார்வையிட்டுள்ளார். இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட சேதத்தை அவர் நேரில் கண்டு நிலவரத்தை அறிந்துகொண்டார்.

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மங்கு சௌக் கிராமத்திற்குச் சென்ற திரு ‌ஷா, அங்குள்ள மக்களைச் சந்தித்தார்.

விக்ரம் சௌக்கில் உள்ள தாவி பாலத்தையும் ஆற்றங்கரையோரத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளையும் அவர் பார்வையிட்டார்.

திரு ‌ஷாவுடன் ஜம்மு கா‌‌ஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் சென்றிருந்தனர்.

பின்னர் திரு ‌ஷா தலைமையில் நடைபெற்ற உயர்நிலைச் சந்திப்பில் அவர்களுடன் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அண்மைச் சம்பவங்களில் பலர் மாண்டதற்கு உள்துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி அண்மை நெருக்கடியின் முதல் நாளிலிருந்தே திரு அப்துல்லாவுடனும் திரு சின்ஹாவுடனும் பேசிவருவதாக அவர் சொன்னார். மீட்புப் பணிகளில் இந்திய அரசாங்கம் தன்னால் ஆன அனைத்தையும் செய்ததாகவும் திரு ‌ஷா குறிப்பிட்டார்.

“ஜம்மு கா‌‌ஷ்மீர் அரசாங்கமும் அனைத்து அமைப்புகளும் சேர்ந்து பணியாற்றியதால் சேதத்தின் கடுமை குறைந்தது; பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன,” என்றார் உள்துறை அமைச்சர்.

அனைத்து முன்னெச்சரிக்கைச் செயலிகளையும் அவற்றின் துல்லியத்தையும் அடித்தள நிலைகளை எட்டும் ஆற்றல்களையும் பகுப்பாய்வு செய்வது முக்கியம் என்று அவர் சொன்னார்.

பகுப்பாய்வின் மூலம் கட்டமைப்புகளை மேம்படுத்துவதே உயிருடற்சேதம் ஏற்படாத நிலைக்கு முன்னேறுவதற்கான ஒரே வழி என்று திரு ‌ஷா வலியுறுத்தினார்.

மேக வெடிப்புகளுக்கும் மேகங்களில் உள்ள ஈரப்பதத்திற்கும் இடையிலான தொடர்பை அடையாளம் கண்டு முன்னெச்சரிக்கைக் கட்டமைப்பை உருவாக்குவதில் வானிலை ஆய்வகமும் தேசியப் பேரிடர் நிர்வாக ஆணையமும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.

பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து நடமாட்டம் தொடங்கிவிட்டது; பாதிக்கப்பட்ட பகுதிகளில் 80 விழுக்காட்டுக்கும் மேல் மின்சார விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டது; மீண்டும் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது; மருத்துவ நிலையங்கள் சீராகச் செயல்படுகின்றன என்று திரு ‌ஷா கூறினார்.

சேத நிலவரம் ஆராயப்பட்ட பிறகு, இயன்ற உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்