கொச்சி: புகழ்பெற்ற அனைத்துலக ஆபரண நிறுவனமான ‘ஜோயாலுக்காஸ்’ (Joyalukkas) குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் ஜோயாலுக்காசின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு வசதிகுறைந்தோரில் நல்வாழ்விற்காக ரூ.100 கோடி மதிப்பிலான புதிய சமூகநலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொச்சியில் நடைபெற்ற விழாவில், கேரள முதல்வர் வி.டி. சதீசன் அத்திட்டங்களை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் சமூகநலத் திட்டங்களை விரிவுபடுத்தவும் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் ரூ.100 கோடி நிதி பயன்படுத்தப்படும்.
வசதியில்லாத குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் கட்டித் தருதல், பெண் குழந்தைகளின் கல்வி ஆதரவு, ‘ஜாய் ஆஃப் ஹோப்’ (Joy of Hope) கல்வி உதவித்தொகை, பெண்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சித் திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளன.
வசதியில்லாத நோயாளிகளுக்கு இலவச சிறுநீரக சுத்திகரிப்பு, ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்துதல், முதியோர் இல்லப் பராமரிப்பு உதவிகளுடன் ‘ஜாய் ஃபார் எர்த்’ (Joy for Earth) எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவையும் ரூ.100 கோடி நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும்.
சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பொருளியல், சமூக வளர்ச்சியே உண்மையான முன்னேற்றம் என்று விழாவில் பேசிய டாக்டர் ஜோயாலுக்காஸ் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் 550க்கும் மேற்பட்ட வீடுகளை ‘ஜோயாலுக்காஸ்’ குழுமம் கட்டித் தந்துள்ளது. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற பேரிடர் காலங்களிலும் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.
இவ்விழாவில் திரைப்பட நட்சத்திரங்கள் மம்முட்டி, திலீப், குஞ்சாக்கோ போபன், இயக்குநர்கள், தொழிலதிபர்கள் கொச்சௌசேஃப் சிட்டிலப்பல்லி, கோகுலம் கோபாலன், எம்பி ஹிபி ஈடன், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் உட்பட பல முக்கியப் புள்ளிகள் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
