புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, ஊழல் புகார்கள், நாடாளுமன்ற விசாரணைகளுக்கிடையே வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) பதவி விலகியுள்ளார்.
கடந்தாண்டு மார்ச் மாதம் டெல்லியில் அவர் வசித்த அரசு பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் பணியின்போது, வீட்டில் ஓர் அறையில், எரிந்த நிலையில் ஐநூறு ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாக கண்டெடுக்கப்பட்டன.
சம்பவத்தைத் தொடர்ந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு யஷ்வந்த் வர்மா மாற்றப்பட்டார்.
அவரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி , நாடாளுமன்ற நாயகர் ஓம் பிர்லாவிடம் ஆளும், எதிர்க்கட்சிக் கூட்டணி எம்.பி.க்கள் மனு அளித்தனர். அதையேற்ற ஓம் பிர்லா, விசாரணைக் குழு அமைத்தார்.
அதை ரத்து செய்யக்கோரி யஷ்வந்த் வர்மா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள் நாடாளுமன்றக் குழு விசாரணையை தொடர நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுகள் தொடர்பாக உள் விசாரணை ஒன்றை அவர் எதிர்கொண்டு வருகிறார். பதவி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்ற சூழல் உருவானது.
இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா அதிபர் திரௌபதி முர்முவிடம் தனது பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளார்.
யஷ்வந்த் வர்மா தானாக முன்வந்து பதவி விலகியதால் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உரிய ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளுக்கு அவர் தகுதியுடையவராக இருப்பார் என்று கூறப்படுகிறது.


