முசாபர்நகர்: பதினாறு மாதங்களில் 36 பேருக்கு மரண தண்டனை விதித்து நாடு முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த நீதிபதி ரவிக் குமார் திவாகர், விரைவு நீதிமன்றத்திலிருந்து குடும்ப நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரபூர்வப் பணியிட மாற்ற உத்தரவின்படி, அவர் முசாபர்நகர் குடும்ப நீதிமன்றக் கூடுதல் முதன்மை நீதிபதியாகப் பொறுப்பேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு திவாகர், உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர்நகரில் 11 வழக்குகளில் 23 பேருக்கும் பரேலியில் 13 பேருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
விரைவு நீதிமன்றப் பொறுப்பதிகாரியாக இருந்த அவர், முசாபர்நகர், ஷாம்லி மாவட்டங்களின் கடும் குற்றவியல் வழக்குகளை விசாரித்தார்.
அங்கு மனைவியை உயிருடன் தீயிட்டுக் கொன்ற குற்றவாளிக்குத் தமது 23வது மரண தண்டனையை அவர் விதித்தார்.
முன்னதாக வாரணாசியில் மூத்த சிவில் நீதிபதியாகப் பணியாற்றியபோது, ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் காணொளிப் பதிவுடன் கூடிய கள ஆய்வை நடத்தவும் அவர் உத்தரவிட்டார்.
அப்போது அங்குள்ள பகுதியில் சிவலிங்கம் இருப்பதாக இந்து மனுதாரர்கள் உரிமை கோரிய நிலையில், அதனை முஸ்லிம் தரப்பினர் மறுத்தனர். அதனையடுத்து உச்ச நீதிமன்றம் அவ்வழக்கு விசாரணையை வாரணாசி மாவட்ட நீதிபதியின் நீதிமன்றத்திற்கு மாற்றியது.
இத்தீர்ப்பைத் தொடர்ந்து அனைத்துலகத் தொலைபேசி எண்களிலிருந்து தமக்கு அச்சுறுத்தல்கள் வருவதாகத் திரு திவாகர் புகார் தெரிவித்தார்.
இதற்கிடையே, அவரது நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 97 கொலை வழக்குக் கோப்புகள் அப்போதைய மாவட்ட அமர்வு நீதிபதி பிரேந்திர குமார் சிங்கின் உத்தரவின்பேரில் திரும்பப் பெறப்பட்டன.
காரணங்கள் எதையும் முறையாகப் பதிவு செய்யாமல் வழக்குக் கோப்புகளைத் திரும்பப் பெற்றது குறித்து திவாகர் கேள்வி எழுப்பினார்.
தமக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர் நீக்கப்பட்டதால் தமது பாதுகாப்பு பலவீனமடைந்துவிட்டதாக மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநருக்கு அவர் கடிதம் எழுதினார். எனினும் மாற்றுப் பாதுகாப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
46 வயதான திவாகர் 2009ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச நீதித்துறையில் இளநிலை சிவில் நீதிபதியாகப் பணியில் இணைந்தார்.
அவர் வணிகவியல், இளநிலைச் சட்டம் மற்றும் முதுநிலைச் சட்டப் பட்டங்களைப் பெற்றுள்ளார். முன்னதாக ஆசம்கர், சுல்தான்பூர், புதாயூன், வாரணாசி, பரேலி, சித்ரகூட் ஆகிய பகுதிகளில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.
புதிய நீதிமன்ற உத்தரவின்படி, விரைவு நீதிமன்றத்தின் புதிய பொறுப்பதிகாரியாக நீதிபதி சிவகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
