கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஏழு நீதித்துறை அதிகாரிகள் சமூக விரோதக் கும்பலால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வுப் பிரிவு 12 வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
அண்மையில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்காக (எஸ்ஐஆர்) உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து நீதித்துறை அதிகாரிகள் பலர் மேற்கு வங்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, மால்டா மாவட்டத்தில் உள்ள காலியாசக், மோதாபரி பகுதிகளில் அந்த நீதித்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு திடீரென கூடிய சமூக விரோதக் கும்பலைச் சேர்ந்த சிலர், ஏழு நீதித்துறை அதிகாரிகளைச் சுற்றி வளைத்துச் சிறைபிடித்தனர். அவர்களில் மூன்று பெண் அதிகாரிகளும் அடங்குவர். மேலும், ஐந்து வயதுக் குழந்தையும் சிறைபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்களுக்கு உணவு, குடிநீர் என்று எதுவும் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, மேற்கு வங்க அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியது.
தொடர்புடைய செய்திகள்
அரசமைப்புச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கை தேசிய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு மாற்றுவதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில், புலனாய்வுப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், நீதித்துறை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 12 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

