வலிமை மிக்க பெண் தலைவர் என்பதற்கும் அப்பால் மத்திய பாஜக அரசை துணிச்சலுடன் எதிர்க்கும் போர்க்குணம் கொண்டவர் மேற்கு வங்க மாநில முதல்வரான மம்தா பானர்ஜி. பெண்கள் உயர்வில் அதிக அக்கறை காட்டும் அவர், இந்தத் தேர்தலில்கூட ஆக அதிகமாக 52 பெண்களைக் களத்தில் நிறுத்தி உள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொடங்கி இருபது ஆண்டுகளாகத் தேர்தல் களத்திலிலுள்ள அவர், 15 ஆண்டுகளாக முதல்வர் பதவியில் நீடிக்கிறார். 2011, 2016, 2021 என வரிசையாக மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் வென்று அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இருக்கிறார் ‘தீதி’ (அக்கா) என்று மாநில மக்களால் அழைக்கப்படும் மம்தா, 71.
ஏப்ரல் 23, 29 என இருகட்டங்களாக அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. மம்தாவின் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் வென்று வந்துள்ளது. 2006ல் முதன்முறை தேர்தல் களம் கண்ட அக்கட்சி 30 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால், 2011ஆம் ஆண்டில் தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது. இடதுசாரி முன்னணியைப் பின்னுக்குத் தள்ளி 184 இடங்களில் வென்று முதன்முதலாக ஆட்சியைப் பிடித்தது திரிணாமூல் காங்கிரஸ். அடுத்து, 2016 தேர்தலில் 211 இடங்களிலும் 2021 தேர்தலில் இன்னும் கூடுதலாக, 215 இடங்களிலும் அக்கட்சி வென்று ஆட்சி பீடத்தில் உள்ளது. மம்தாவின் 15 ஆண்டுகால முதல்வர் பதவி இன்னும் ஐந்தாண்டுகளுக்குத் தொடர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது பாஜக.
கோல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 26 வயது முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தைப் பிரசாரத்திற்குக் கையில் எடுத்துள்ளது அக்கட்சி. மேலும், அந்த மருத்துவரின் தாயார் ரத்னா தேவ்நாத்தை தனது வேட்பாளராகக் களமிறக்கி உள்ளது பாஜக. மேற்கு வங்கத்தில் தீதியின் ஆட்சி மாறினால் மட்டுமே நீதி கிடைக்கும் என அந்தத் தாயார் பிரசாரம் செய்து வருகிறார். ஆயினும், இந்தக் காரணங்களால் மம்தா ஒரேயடியாக வீழ்ந்துவிடுவார் என்று சொல்வதற்கில்லை. பத்தாண்டுகளாகக் கைகோத்து நின்ற கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் இந்தத் தேர்தலில் முகத்தைத் திருப்பிக்கொண்டதால் அங்கு நான்குமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. வாக்குகள் பிரிவது மம்தாவுக்குச் சாதகமே.
எதிர்த்துக் களம் காணும் பாஜகவுக்கு தலைமைத்துவப் பிரச்சினை உள்ளது. இப்போது அந்தக் கட்சியை வழிநடத்தும் சுவேந்து அதிகாரிகூட மம்தா கட்சியிலிருந்து மாறிச் சென்றவர்தான். மம்தாவின் அசுர பலத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய தலைவர் பாஜகவில் இல்லை எனலாம். ஆயினும், பாஜகவும் தேர்தலுக்குத் தேர்தல் வளர்ந்து வருகிறது. 2016ல் மூன்று இடங்களில் மட்டுமே வென்ற பாஜக, 2021 தேர்தலில் 77 இடங்களில் வென்று பத்து விழுக்காட்டிலிருந்து 38.9 விழுக்காட்டுக்கு தனது வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது.
பாஜக ஆட்சியைப் பிடிப்பது இந்தத் தேர்தலிலேயே நிகழ்ந்துவிடும் என்று எதிர்பார்த்திட இயலாத அளவுக்கு, ஆதரவு-எதிர்ப்பு என எந்த ஓர் அலையும் இல்லாமல் இருக்கிறது தேர்தல் களம். மம்தா நான்காவது முறை அரியணை ஏறுவாரா அல்லது ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து பாஜக ஆட்சி அமைக்குமா என்பதெல்லாம் கேள்விகள். விடை தெரிய ஐந்து வாரங்கள் காத்திருக்க வேண்டும். -திருநா

