காளியும் கறுப்புதான்: மோடியின் கறுப்பு உடை விமர்சனத்துக்கு கனிமொழி பதிலடி

போராட்டத்தின் அடையாளம் கறுப்பு - கனிமொழி விளக்கம்

காளியும் கறுப்புதான்: மோடியின் கறுப்பு உடை விமர்சனத்துக்கு கனிமொழி பதிலடி

2 mins read
9b27a8ab-3d35-417a-a9e5-b713d7e370fe
எம்.பி.க்களின் கருப்பு உடையை விமர்சித்த பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி.கனிமொழி பதிலடி. - படம்: தினமணி

புதுடெல்லி: நாடாளுமன்றத்துக்கு திமுக எம்.பி.க்கள் கறுப்பு உடை அணிந்து சென்றதை விமர்சித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிலளித்துள்ளார்.

மக்களவையில் மகளிர் இடஒதுக்கீட்டு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா உள்ளிட்டவை வியாழக்கிழமை (ஏப்ரல் 16) தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

வியாழக்கிழமை பேசிய பிரதமர் மோடி, தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புடை அணிந்திருந்த திமுக எம்.பி.க்களை விமர்சித்தார்.

“இந்து மதத்தைப் பாதுகாக்க இங்கே அமர்ந்திருப்பவர்களுக்கு காளி கறுப்பு நிறம் என்பது நினைவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பெண் சக்தியைப் பறைசாற்றும் காளியும் கருப்பு நிற உடைதான் அணிந்துள்ளார். ஒருவரின் ஆணவம், அராஜகம் அழிக்கும் தன்மைகொண்டவர் காளி.

“அந்தக் கருப்பு நிறத்தைத் தேர்ந்தெடுத்து நாங்கள் போராட்டம் செய்கிறோம். ஏனெனில் அது பெரியாரின் நிறம்.

“சுயமரியாதை, தலை குனியக்கூடாது, கடைசிவரை போராடு என்ற குணத்தை கற்றுக் கொடுத்தவர் பெரியார். கடைசிவரை நாங்கள் போராடுவோம்,” என்று கனிமொழி தெரிவித்தார்.

திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு பேசுகையில், “தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருப்புக்கொடியேற்றிப் போராட்டம் நடத்தினார்,” என்றார்.

அப்போது குறுக்கிட்ட மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, “கருப்புக் கொடியோ, நீலக் கொடியோ எதை ஏற்றினால் என்ன?” என்று விமர்சித்திருந்தார்.

அதனையும் குறிப்பிட்டு கனிமொழி பேசினார்.

“கருப்புக் கொடி என்பது போராட்டத்தின் அடையாளம். நீலக் கொடி என்பது அம்பேத்கர் அவரது கட்சிக்காகத் தேர்வு செய்தது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். அதைத்தான் நீங்கள் நிராகரித்தீர்கள். அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை நீங்கள் சீர்குலைக்க நினைக்கிறீர்கள். நாங்கள் பாதுகாக்க முயற்சிக்கிறோம்,” என்று கூறினார் கனிமொழி.

வாய்மொழி உத்தரவாதம் போதாது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி கருத்து.
மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி கருத்து. - படம்: தினமணி

தொகுதி மறுவரையறை மசோதாவிலேயே நிறைய குழப்பங்கள் இருப்பதாகவும் வாக்கெடுப்புக்கு முன்னதாக மசோதாவைத் திரும்பப் பெறுவார்கள் என்று நம்புவதாகவும் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

அவையில் அளிக்கப்படும் வெறும் வாய்மொழி உத்தரவாதம் எந்தவொரு மாநிலத்திற்கும் போதுமானவை அல்ல.

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவைத் தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. இரண்டும் வெவ்வேறானது.

தற்போதுள்ள இடங்களின் எண்ணிக்கையைக் கொண்டே மகளிர் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தி, பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க முடியும் என்றார் கனிமொழி.

“இந்த மசோதாக்களுக்கு எதிராகவே திமுக வாக்களிக்கும். அதற்கு முன்னதாகவே மசோதாக்களைத் திரும்பப் பெறப்படும் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்