புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்ஹாசன், டெல்லியில் வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 7) பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
அப்போது கீழடி விவகாரத்தில் பிரதமர் மோடி தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசன் அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தின், மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து கடந்த ஜூலை 25ஆம் தேதி புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்ட அவர், அங்கு பல்வேறு முக்கியப் பிரமுகர்களை சந்தித்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், அது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமரை தாம் மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது ஒரு கலைஞனாகவும் தமிழகத்தின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.
“எனது கோரிக்கைகளில் தலையாயது கீழடி. தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்,” என்றும் கமல்ஹாசன் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தற்போது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. திமுகவின் ஆதரவோடுதான் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார் கமல். இதையடுத்து ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். டெல்லி பயணத்துக்கு முன்பு, தனது நண்பர் ரஜினியையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் கமல்ஹாசன்.