பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கொவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
இதுவரை 40க்கும் மேற்பட்டோர் அந்தப் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை (மே 24) மேலும் ஐவருக்கு அந்த மாநிலத்தில் கொவிட்-19 தொற்று ஏற்பட்டது. புதிய வகை தொற்று அது என்று மாநில சுகாதார அதிகாரிகள் கூறினர்.
புதிய தொற்றால் முதல் மரணம் அங்கு நிகழ்ந்துள்ளது.
ஒயிட்ஃபீல்ட் என்னும் இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 85 வயது ஆடவர் உயிரிழந்தார்.
பல்வேறு உடல்நிலை பாதிப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சில வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொவிட்-19 பெருந்தொற்று இருப்பது சனிக்கிழமை (மே 24) உறுதி செய்யப்பட்டது.
அன்றே அவர் மரணமடைந்துவிட்டதாக சுகாதார, குடும்பநலத் துறை தெரிவித்து உள்ளது.
இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலம் தானே என்னும் பகுதியில் 21 வயது இளையர் ஒருவர் உயிரிழந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவருக்கு நீரிழிவு நோயும் இருந்தது. கிரேட்டர் மும்பைக்கு உட்பட்ட பகுதியில் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் அவரும் ஒருவர்.
இருப்பினும், ஒருவகை நீரிழிவுக் கோளாற்றால் அவர் உயிரிழந்தாரா அல்லது கொவிட்-19 அவரது உயிரைப் பறித்ததா என்பதை மாநில சுகாதார அதிகாரிகள் உறுதி செய்யவில்லை.
மும்பை அருகில் உள்ள கல்வா என்னும் பகுதியைச் சேர்ந்த அந்த இளையரோடு சேர்த்து, மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்து உள்ளது.
உயிரிழந்த அனைவரும் கொரோனாவுடன் வெவ்வேறு இதர நோய்களாலும் பாதிக்கப்பட்டவர்கள்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 10 நாள்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதுவும் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில்தான் அதிக அளவில் அது பரவுகிறது.
தீவிர கண்காணிப்பு
கொவிட்-19 பெருந்தொற்று நோயாளிகள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதால் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளன.
நோய்க் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் யோசனையிலும் அவை ஈடுபட்டு வருகின்றன.
இருந்தபோதிலும், மத்திய அரசு இதுவரை புதிதாக எந்தவொரு கட்டுப்பாட்டையும் அறிவிக்கவில்லை. அதனால், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மொத்தம் 20 மாநிலங்களில் கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிய தொற்று
தமிழ்நாட்டில் NB.1.8.1 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 66 பேருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று தமிழ்நாட்டில் மட்டுமே பரவியுள்ளது.