கர்நாடகா: வேட்டையாடச் சென்றதாக மூன்று தமிழர்கள் சுட்டுக்கொலை

கர்நாடகா: வேட்டையாடச் சென்றதாக மூன்று தமிழர்கள் சுட்டுக்கொலை

படம்: இந்து தமிழ் திசை

16 Aug 2026 - 5:13 pm

2 mins read

பெங்களூரு: கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில் காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது.

அங்​குள்ள தோமை​யார்​பாளை​யம் அருகே சிலர் சட்​ட​ விரோத​மாக மான்​களை வேட்​டை​யாடு​வ​தாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) இரவு வனத்​துறை​யினருக்குத் தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, அப்பகுதியில் அதிகாரிகள் கண்​காணிப்புப் பணி​யில் ஈடு​பட்​டனர்.

சனிக்கிழமை அதி​காலை 5 மணி​யள​வில் வனப்​பகு​தி​யில் வனத்​துறை​யினர் சுற்றுக்காவல் பணி​யில் ஈடுபட்டிருந்தபோது, மறைந்​திருந்த நான்கு தமிழர்கள், அவர்​கள் மீது நாட்டுத் துப்​பாக்​கி​யால் தாக்​குதல் நடத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, வனத்​துறை​யினர் நடத்​திய துப்​பாக்கிச் சூட்​டில் ம‌ரியமங்​கலம் கிராமத்தைச் சேர்ந்த அந்​தோனி​சாமி (50), ஜான்​ரோஸ் பீட்​டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவர் உயி​ரிழந்​தனர்.

படு​கா​யம் அடைந்த மகிமை தாஸ் (48) மைசூரு​வில் உள்ள அரசு மருத்துவமனை​யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் உறவினர்​களும் கிராம மக்​களும் கொள்​ளே​கால், ஹனூர், தோமை​யார் பாளை​யம், ஜகன்​னாத தொட்டி உள்​ளிட்ட இடங்​களில் உள்ள‌ வனத்​துறை அலு​வல​கத்தை அடித்து நொறுக்​கினர்.

இந்தச் சம்​பவத்தைக் கண்​டித்து 100க்​கும் மேற்​பட்​டோர் மைசூரு, மேட்​டூர், சத்​தி​யமங்​கலம் ஆகிய இடங்​களுக்குச் செல்​லும் சாலைகளை மறித்து ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதனால் அங்குப் பதற்​றம் ஏற்​பட்​ட​தால் காவல்துறையினர் குவிக்​கப்​பட்​டு, பலத்த பாது​காப்​பு போட‌ப்​பட்​டுள்​ளது.

விசா​ரணைக்கு உத்​தரவு

இந்நிலையில், கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவக்கு​மார், “இந்தத் தாக்​குதலில் உயிரிழந்த மூவரின் உடல்​களும் மைசூரு கே.ஆர்​.மருத்​து​வ​மனைக்கு உடற்கூராய்வுக்குக் கொண்டு செல்​லப்​பட்​டுள்​ளது. வனத்​துறை அதிகாரி ஒரு​வர் காயமடைந்துள்ளார். கொல்​லப்​பட்​ட​வர்​களிடம் இருந்து இரண்டு நாட்டுத் துப்​பாக்​கி​கள், மான் இறைச்சி ஆகியவை பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. இந்தச் சம்​பவம் குறித்து விசா​ரணை நடத்தி அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு அதி​காரி​களுக்​கு உத்​தர​விட்​டுள்​ளேன்,​” என்​றார்​.

“கொல்லப்பட்ட மூவரும் மாடு மேய்க்கச் சென்றவர்கள். இரவில் வனப்பகுதியில் தங்கி மாடு மேய்ப்பார்கள். அவர்களை மான் வேட்டைக்குச் சென்றதாகச் சந்தேகப்பட்டு வனத்துறையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். உரிய நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம்,” என்று கொள்ளேகால் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்