பெங்களூரு: கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகில் காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுதி உள்ளது.
அங்குள்ள தோமையார்பாளையம் அருகே சிலர் சட்ட விரோதமாக மான்களை வேட்டையாடுவதாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) இரவு வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் வனப்பகுதியில் வனத்துறையினர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மறைந்திருந்த நான்கு தமிழர்கள், அவர்கள் மீது நாட்டுத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவர் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த மகிமை தாஸ் (48) மைசூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் கிராம மக்களும் கொள்ளேகால், ஹனூர், தோமையார் பாளையம், ஜகன்னாத தொட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள வனத்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் மைசூரு, மேட்டூர், சத்தியமங்கலம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்குப் பதற்றம் ஏற்பட்டதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
இந்நிலையில், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், “இந்தத் தாக்குதலில் உயிரிழந்த மூவரின் உடல்களும் மைசூரு கே.ஆர்.மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். கொல்லப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், மான் இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என்றார்.
“கொல்லப்பட்ட மூவரும் மாடு மேய்க்கச் சென்றவர்கள். இரவில் வனப்பகுதியில் தங்கி மாடு மேய்ப்பார்கள். அவர்களை மான் வேட்டைக்குச் சென்றதாகச் சந்தேகப்பட்டு வனத்துறையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். உரிய நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம்,” என்று கொள்ளேகால் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


