புதுடெல்லி: வாரணாசியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாரணாசிக்கும் - தமிழகத்துக்கும் பழைமை காலத்தில் இருந்த உறவை புதுப்பிக்கும் வகையில் இந்நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி நடத்த ஏற்பாடு செய்தார்.
தற்போது காசி தமிழ்ச் சங்கமத்தின் மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெற்ற தொடக்க விழாவில் பல அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இம்மாதம் 24ஆம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடக்கும். 10 நாள்களுக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள், கலைஞர்கள், சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள், தொழில்முனைவோர்கள் என பல்வேறு தரப்பை சேர்ந்த 1,000 பேர் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
மேலும் தமிழகத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் சுமார் 200 மாணவர்களும் காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்கின்றனர்.

