புதுடெல்லி: வரும் பிப்ரவரி 15ஆம் தேதி காசி தமிழ்ச் சங்கமம் தொடங்கவிருப்பதாக இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் காசி தமிழ்ச் சங்கமம் பத்து நாள்கள், அதாவது பிப்ரவரி 24ஆம் தேதிவரை நடைபெறும்.
மூன்றாவது முறையாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, இம்முறை ‘அகத்திய முனி’ என்ற கருப்பொருளைக் கொண்டிருக்கும்.
சென்ற முறையைப் போலவே, இம்முறையும் வாரணாசியின் கங்கைக் கரைகளில் உள்ள ‘நமோ காட்’டில் நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்மூலம் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ எனும் கொள்கை மீண்டும் பரப்பப்படும் என்று அமைச்சர் பிரதான் தெரிவித்துள்ளார்.
காசி தமிழ்ச் சங்கமத்திற்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் kasitamil.iit.m.ac.in என்ற இணையத்தளம் மூலம் பதிவுசெய்துகொள்ளலாம். நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களையும் அந்த இணையத்தளம் வழியாக அறிந்துகொள்ளலாம்.
இதில், 1,200 பேருடன் ஐஐடி, என்ஐடி, மத்தியப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 200 மாணவர்கள் கலந்துகொள்வர் என்றும் அந்த 200 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 13ஆம் தேதி தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் அவர்கள், பிப்ரவரி 26ஆம் தேதி மீண்டும் தமிழ்நாட்டிற்குத் திரும்புவர்.