ஸ்ரீநகர்: கனமழையால் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் காஷ்மீரின் இந்தியக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் குறைந்தது 60 பேர் உயிரிழந்தனர். அத்துடன்,200 பேர் காணாமல் போயுள்ளனர்.
உயிர் பிழைத்தோருக்கான தேடல் பணிகளை, மீட்புக் குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதிகரிக்கும் நிலச்சரிவுகளும் வெள்ள நீரும் சசோட்டி நகரைப் புரட்டிப் போட்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. வியாழக்கிழமை பிற்பகல் வேளையில் சசோட்டி என்ற கிராமம் மண்சரிவும் வெள்ளமும் காரணமாக முழுவதும் மூழ்கியது. பிரபலமான வழிபாட்டுத் தலத்துக்குச் செல்லும் முன் அங்கு உணவருந்திக் கொண்டிருந்த யாத்திரீகர்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.
கிட்டத்தட்ட ஒரே வாரத்திற்குள் இமாலயப் பகுதியில் நடந்த இரண்டாவது பேரிடராக இது உள்ளது.
“பெரிய சத்தம் கேட்டது. அதற்குப் பின் திடீர் வெள்ளமும் சேற்றோட்டமும் வந்தன. மக்கள் அலறிக் கொண்டிருந்தனர். சிலர் செனாப் ஆற்றில் விழுந்தனர். சிலர் சிதைவுகளின் அடியில் புதைந்து போனார்கள்,” எனக் காயமடைந்த புனிதப் பயணிகளில் ஒருவரான ராகேஷ் சர்மா கூறினார்.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக, மீட்புப் பணியாளர்கள் கயிறுகளைப் பயன்படுத்தி, தற்காலிக பாலங்களைக் கடந்து சென்று தங்கள் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் முதல்வர் ஓமர் அப்துல்லா, “குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் 200 பேரை இன்னும் காணவில்லை,” என்று கடந்த வெள்ளிக்கிழமை ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இமாலயப் பகுதிகளில் வெள்ளம், மண்சரிவு அடிக்கடி நிகழ்கின்றன. இருந்தபோதும், இந்நிகழ்வுகளின் தீவிரமும் அடிக்கடி நிகழும் தன்மையும் பருவநிலை மாற்றத்தால் கூடியுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். துர்கையின் அம்சமாகக் கருதப்படும் மச்சைல் மாதா கோவிலுக்கு செல்லும் உயரமான இமாலயத் தல யாத்திரையாக மச்சைல் யாத்திரை அறியப்படுகிறது. சசோட்டியில் வாகனப் பாதை முடியும் இடத்திலிருந்து புனித பயணிகள் நடைபயணமாகப் புறப்படுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்து, உத்தராகண்டில் ஒரு கிராமமே மண்சரிவும் வெள்ளத்தாலும் மூழ்கிய சம்பவத்திற்குப் பின் நடந்துள்ளது.
அண்டை நாடான நேப்பாளத்தில், ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழைக்குப் பிறகு இதுவரை, 41 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 21 பேரைக் காணவில்லை.