ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இருக்கும் கத்ரா நகரில் வியாழக்கிழமை (டிசம்பர் 26) முதல் 72 மணிநேரத்துக்கு கடையடைப்பு நடப்பில் இருந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரபல வைஷ்னோ தேவி கோயிலுக்குப் போகும் பக்தர்கள் கத்ரா மலையடியில்தான் ஒன்றுகூடுவர். புதிய கம்பிவண்டித் திட்டத்தை (ropeway project) எதிர்த்து கத்ராவில் கடையடைப்பு நடப்பில் இருப்பதால் அக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பல சவால்களை எதிர்நோக்குவதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அந்நகரில் உள்ள வர்த்தகர்கள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் புதிய கம்பிவண்டித் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கத்ராவில் கடைகளும் வர்த்தகங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்த முடக்கநிலையை ஸ்ரீ மாதா வைஷ்னோ தேவி சங்கர்ஷ் சமிதி (Shri Mata Vaishno Devi Sangarsh Samiti) எனும் அமைப்பு வழிநடத்துகிறது. புதிய கம்பிவடத் திட்டம், உள்ளூர்வாசிகளின் வாழ்வாதாரம் மட்டுமின்றி கத்ராவின் பொருளியலையும் பாதிக்கும் என்பது அந்த அமைப்புத் தலைவர்களின் வாதம்.
கத்ராவில் அமைதிப் பேரணியில் ஈடுபட்ட சமிதி தலைவர்களும் வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கடையடைப்பு அகற்றப்படாது என்றும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அது நீட்டிக்கப்படக்கூடும் என்றும் சமிதி அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.

