தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழர் தொன்மை, கீழடி உண்மையை ஒருபோதும் மறைக்க இயலாது: சு.வெங்கடேசன்

2 mins read
1b6deae6-6db7-4ffe-98f9-b62a00ab0597
சு.வெங்கடேசன். - படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டின் தொன்மைக்கும் கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரிகள் யார் என்பதை மத்திய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக்கொண்டிருப்பதாக மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

கீழடியின் உண்மைகளை அதிகாரபூர்வமாக அறிவிக்க மத்திய தொல்லியல் துறை எளிதில் முன்வராது என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொல்லியல் நிபுணர் அமர்நாத் இராமகிருஷ்ணனின் ஆய்வு அறிக்கையை மத்திய தொல்லியல் துறை இதுவரை வெளியிடாததற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் திருத்தம் தேவை என்று கூறியுள்ளது மத்திய தொல்லியல் துறை.

“கீழடி எனும் வரலாற்றுத் தொல் நகரம் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்தார்.

“ஆனால் தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது ‘விரைவில் வெளியிடப்படும்’ என்று தொல்லியல் துறையால் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனாலும் இப்பொழுது வரை அறிக்கை வெளியிடப்படவில்லை.

“இந்நிலையில், கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது,” என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

புராணங்களை வரலாறாக மாற்ற நாள்தோறும் பணியாற்றி வரும் பாஜக அரசு, அதே வேகத்தோடு தமிழர் வரலாற்றை மறைக்கவும் பணியாற்றி வருவதாகச் சாடியுள்ள அவர், தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை என்பது பாஜக அரசின் அரசாணையோடு சம்பந்தப்பட்டதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு தொடர்புடையது என்றும் அதை ஒருபோதும் மறைக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள சு.வெங்கடேசன், ‘கீழடி தமிழர்களின் தாய்மடி” என்ற உண்மையை உரக்கச்சொல்வோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்