2,000 செயலிகள், 5,000 இணையத்தளங்களை முடக்கிய கேரள அரசு

2,000 செயலிகள், 5,000 இணையத்தளங்களை முடக்கிய கேரள அரசு

1 mins read
aff9bc17-3e62-4d37-935f-eaee595f8095
இணையக் குற்றங்கள் அதிகமாக நடக்கும் இந்திய மாநிலங்களின் பட்டியலில் கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது. - படம்: தினமணி

திருவனந்தபுரம்: இணையவழி நிதி மோசடிகளைத் தடுக்க, விரிவான திட்டங்களை உருவாக்கி வருவதாக கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் 2,000க்கும் மேற்பட்ட கடன் வழங்கும் செயலிகள், 5,000க்கும் மேற்பட்ட போலி இணையத்தளங்கள் முடக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

கேரளச் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஷ், சென்னிதாலா இணையக் குற்றங்களை மாநில அரசு தீவிரமான பிரச்சினையாகக் கருதுகிறது என்றார்.

இணையக் குற்றங்கள் அதிகமாக நடக்கும் இந்திய மாநிலங்களின் பட்டியலில் கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதுகுறித்து கேள்வி எழுப்பிய எம்எல்ஏ அபின்வர்க்கி, கடந்தாண்டில் மட்டும் கேரளாவில் 42,000க்கும் அதிகமானோர் இணையக் குற்றங்களால் பாதிக்கப்பட்டு ரூ.814 கோடியை இழந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அவரது கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, கேரளாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இணையக்குற்றம் தொடர்பாக 1,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளதாகக் குறிப்பிட்டார்.

ரிசர்வ் வங்கி அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயல்பட்ட 1,836 கடன் சேவைகளும் நிதி மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 5,000 போலி இணையத் தளங்களும் காவல்துறையால் முடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இணையவழி விளையாட்டுகள் மூலம் சிறார்கள்தான் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, இதைத் தடுக்க ஏதுவாக இணையவழி விளையாட்டுகளின் தீமைகள் குறித்து பள்ளிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்