‘மின்னிலக்க அடிமைத்தனம்’: கேரளா ஆய்வு

‘மின்னிலக்க அடிமைத்தனம்’: கேரளா ஆய்வு

2 mins read
96c477df-2017-4a80-9506-3e6f205d82d9
திறன்பேசி, கணினி, சமூக ஊடகங்கள், இணைய விளையாட்டுகள், காணொளித் தளங்கள் ஆகியவற்றை அதிகமாகச் சார்ந்திருக்கும் தனிநபர்கள் மின்னிலக்கப் போதைக்கு அடிமையானவர்களாகக் கருதப்படுகிறார்கள். - படம்: ஃபில்ம்கின்னி.காம்

திருவனந்தபுரம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில், இளையர்கள் மத்தியில் ‘மின்னிலக்க அடிமைத்தனம்’ அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்தப் புதிய போதைப் பழக்கத்தின் தாக்கம் குறித்து விரைவில் தேவைக்கேற்ப ஆய்வு நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொதுக் கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி, உலக அளவில் பல்வேறு துறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் இத்தகைய சூழலில் மின்னிலக்கப் போதை குறித்த ஆய்வு தேவையா என்பதை ஆராய வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கல்வித்துறைக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளதாகக் குறிப்பிட்ட திரு சிவன்குட்டி, சில சம்பவங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்கள் இந்த விவகாரம் தீவிரமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்று என்பதை உணர்த்துவதாகத் தெரிவித்தார்.

கேரள கல்வித்துறையின் பாடத்திட்டக் குழுக் கூட்டத்திலும் மின்னிலக்கப் போதை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், அதன் முடிவில் பொதுக் கல்விச் செயலாளர் கே.வாசுகி தலைமையில் ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“இந்தக் குழு சிறார்கள் இடையே நிலவும் மின்னிலக்கப் போதை குறித்து தீவிரமாக ஆராயும். மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை இக்குழுவினர் அரசிடம் தாக்கல் செய்வர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகளை மாநில அரசு ஆலோசனை நடத்தும்,” என்றும் அமைச்சர் சிவன்குட்டி மேலும் தெரிவித்தார்.

திறன்பேசி, கணினி, சமூக ஊடகங்கள், இணைய விளையாட்டுகள், காணொளித் தளங்கள் ஆகியவற்றை அதிகமாகச் சார்ந்திருக்கும் தனிநபர்கள் மின்னிலக்கப் போதைக்கு அடிமையானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

மற்ற போதைப் பொருள்களைப் போல் மின்னிலக்கப் போதையும் ஓர் தனி நபரின் அன்றாட வாழ்க்கைச் சூழல், சமூக உறவுகள், உளவியல் நலத்தை வெகுவாகப் பாதிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதிலிருந்து விடுபட சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மின்னிலக்க ஆதிக்கம் பரவலாக அதிகரித்து வரும் நிலையில், உலகம் முழுவதும் இது பொதுவான பிரச்சினையாகக் கருதப்படுகிறது.

சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகளும் திரை நேரத்தைக் குறைப்பதும் நல்ல தீர்வுகளாகக் கருதப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்