கோழிக்கோடு: தவறான அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக கிளம்பிய புகாரால் இந்தியாவின் கேரள மாநிலம், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நான்கு வயதுக் குழந்தையின் கையில் முளைத்த ஆறாவது விரலை நீக்குவதற்குப் பதிலாக, அதன் நாக்கில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
செருவன்னூரைச் சேர்ந்த அக்குழந்தை அறுவை சிகிச்சைக்காக வியாழக்கிழமை (மே 16) அம்மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டது.
இந்நிலையில், அக்குழந்தை அழுதபோது அதற்கு நாக்கிலும் பிரச்சினை இருந்தது கண்டறியப்பட்டதாகவும் அதனால் அதன் நாக்கிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் மருத்துவக் கல்லூரித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதுபற்றி அக்குழந்தையின் உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்பட்டது.
பின்னர் அக்குழந்தையின் ஒரு கையில் முளைத்திருந்த ஆறாவது விரலும் நீக்கப்பட்டது. நல்ல உடல்நலத்துடன் இருக்கும் அக்குழந்தை வியாழக்கிழமை மாலையே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, அக்குழந்தையின் நாக்கில் பிரச்சினை இருந்ததாக அதன் குடும்பத்தினர் இதற்குமுன் எந்த ஒரு மருத்துவரையும் பார்த்ததில்லை. அதற்காகச் சிகிச்சையும் நாடியதில்லை.
நாக்கில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்காக சம்பந்தப்பட்ட மருத்துவர் மன்னிப்பு கோரியதாகக் குழந்தையின் குடும்பத்தினர் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
இன்னொரு குழந்தைக்கு இதுபோல் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தவறிழைத்த மருத்துவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், இது தெரியாமல் நடக்கவில்லை என்றும் கவனக்குறைவே காரணம் என்றும் குறிப்பிட்டனர்.