திருச்சூர்: பேருந்தில் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள தொட்டில்பலத்துக்குச் சென்று கொண்டிருந்த 37 வயது நிறைமாத கர்ப்பிணிக்குப் பிரசவ வலி வந்தது.
இதனால், அந்த கேஎஸ்ஆர்டிசி பேருந்து அதன் வழக்கமான வழியிலிருந்து உடனே மாறி அருகிலிருந்த மருத்துவமனையைச் சென்றடைந்தது.
மருத்துவமனையை அடையும்போதே குழந்தையைப் பெற்றெடுக்கும் தறுவாயில் அந்தக் கர்ப்பிணி இருந்தார்.
பேருந்துப் பயணிகள் எல்லோரும் உடனே இறங்கிவிட்டனர். மருத்துவப் பணியாளர்கள் வேலையில் இறங்கினர்.
பேருந்து மருத்துவமனை வாசலில் வந்து நின்றதும் கர்ப்பிணிக்கு உதவ, முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்ட மருத்துவப் பணியாளர்கள் உடனடியாகப் பாய்ந்தனர்.
பேருந்தின் உள்ளே மருத்துவர்களும் தாதியரும் துரிதமாகச் செயல்பட்டு பிரசவம் பார்த்தனர்.
குழந்தை நல்லபடியாகப் பிறந்ததை அடுத்து தாயும் சேயும் மருத்துவமனையில் கூடுதல் பராமரிப்புக்காகச் சேர்க்கப்பட்டனர்.
சாதாரணமாகத் தொடங்கிய பேருந்துப் பயணம், அந்தக் கர்ப்பிணிக்கும் சுற்றி இருந்தவர்களுக்கும் எதிர்பாராத பயணமாக அமைந்துவிட்டது.