சிறுநீரகக் கடத்தல்: டெல்லி மருத்துவர் கைது, திருச்சி மருத்துவர் தலைமறைவு

2 mins read
e845547b-737a-407a-b23d-982de9a7ae72
கைதுசெய்யப்பட்ட டெல்லி மருத்துவருக்கு இடைக்காலப் பிணை வழங்கப்பட்டது. - கோப்புப்படம்: பிபிசி

சந்திரபூர்: சிறுநீரகக் கடத்தல் தொடர்பில் டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்; திருச்சியைச் சேர்ந்த இன்னொருவர் தலைமறைவாகிவிட்டார்.

அந்தக் கடத்தல் கும்பல் இந்திய அளவில் செயல்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. அக்கும்பலுக்கு கம்போடியாவிலும் சீனாவிலும் தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

வசதி குறைந்தவர்களைக் குறிவைத்துச் செயல்பட்ட அக்கும்பல், ஒரு சிறுநீரகத்திற்கு ரூ.5 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வோரிடமிருந்து ரூ.80 லட்சம் வரை அவர்கள் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

டெல்லியைச் சேர்ந்த டாக்டர் ரவீந்தர் பால் சிங், திருச்சியைச் சேர்ந்த டாக்டர் ராஜரத்தினம் கோவிந்தசாமி என்ற இரு சிறப்பு மருத்துவர்களே இந்தக் கள்ளச் சந்தையின் மூளையாகச் செயல்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்தச் சிறுநீரகக் கடத்தல் கும்பலின் செயல்பாட்டை மகாராஷ்டிர மாநில அரசாங்கம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டுபிடித்தது.

மகாராஷ்டிராவின் விதர்பா பகுதி, மிந்தூர் எனும் சிற்றூரைச் சேர்ந்த ரோஷன் குலே என்ற விவசாயி, கடன்முதலைகளிடமிருந்து தப்பிப்பதற்காக கம்போடியாவில் சிறுநீரகத்தை விற்குமாறு தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். அதனையடுத்து, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

அண்மையில் டெல்லியில் கைதுசெய்யப்பட்ட டாக்டர் சிங், அவரை மகாராஷ்டிராவிற்கு அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கக் கோரி, அங்குள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால், விமானம் ரத்து செய்யப்பட்டதால் மகாராஷ்டிர புலனாய்வுக் குழு அங்குச் செல்ல முடியாமல் போனது. அதனைத் தொடர்ந்து, டாக்டர் சிங்கிற்கு இடைக்காலப் பிணை வழங்கப்பட்டது.

அவர் மகாராஷ்டிராவின் சந்திரபூர் தலைமை நீதிமன்றத்தில் ஜனவரி 2ஆம் தேதி முன்னிலையாகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரான டாக்டர் கோவிந்தசாமி தேடப்பட்டு வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த மருத்துவமனையில் பல சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாகச் சந்திரபூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் சுதர்சன் கூறினார்.

ஒவ்வோர் அறுவை சிகிச்சைக்கும் ரூ.50 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை வசூலிக்கப்பட்டதாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

டெல்லியிலிருந்து திருச்சி சென்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட டாக்டர் சிங், ஒவ்வோர் அறுவை சிகிச்சைக்கும் ரூ.10 லட்சம் கட்டணம் பெற்றதாக நம்பப்படுகிறது. சிகிச்சைக்காகவும் மற்ற ஏற்பாடுகளுக்காகவும் டாக்டர் கோவிந்தசாமி கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் வசூலித்ததாகவும் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்