ஹைதராபாத்: சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக் கும்பலுடன் தொடர்புடையதாகக் கூறி இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அறுவர் தலைமறைவாக உள்ளனர் என்று அம்மாநிலத்தின் ராச்சகொண்டா காவல்துறையினர் சனிக்கிழமை (ஜனவரி 25) தெரிவித்தனர்.
அக்கும்பலுக்குத் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களிலும் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தும்படி தெலுங்கானா குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (சிஐடி) அம்மாநிலச் சுகாதார அமைச்சர் தாமோதர் ராஜநரசிம்மா உத்தரவிட்டுள்ளார்.
ஹைதராபாத்தின் சரூர்நகரில் உள்ள அலகாநந்தா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் குண்டுபள்ளி சுமந்த்தையும் அவருடைய உதவியாளர் நரசானி கோபியையும் ஜனவரி 23ஆம் தேதி கைதுசெய்தோம். அவர்கள் இருவார நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்,” என்று காவல்துறை ஆணையர் சுதிர்பாபு தெரிவித்தார்.
கும்பலின் மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் பொது அறுவை சிகிச்சை வல்லுநர் சித்தம்ஷெட்டி அவினாஷ், கர்நாடகாவைச் சேர்ந்த இடைத்தரகர்கள் இருவர், மருத்துவ உதவியாளர்கள் நால்வர் ஆகிய எழுவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்றும் அவர் கூறினார்.
மேலும் இரு அறுவை சிகிச்சை வல்லுநர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜ் சேகர், காஷ்மீரைச் சேர்ந்த சோகிப் என்ற இருவரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அவர்களுடன் மூன்று உதவியாளர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சங்கர் என்ற இடைத்தரகரும் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு கார், ரூ.5 லட்சம் ரொக்கம், பத்துக் கைப்பேசிகள், அறுவை சிகிச்சைக் கருவித் தொகுப்பு ஆகியவற்றைக் காவல்துறை கைப்பற்றியது.
தொடர்புடைய செய்திகள்
“சிறுநீரகத்தைப் பெற்றோரிடமிருந்து இடைத்தரகர்கள் 55 - 60 லட்ச ரூபாய் பெற்றுள்ளனர். அதில், சிறுநீரகத்தைத் தானமாக அளிப்போருக்கு ரூ.5 லட்சத்தை மட்டுமே அவர்கள் கொடுத்துவந்துள்ளனர். அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்குத் தலா ரூ.30,000 வழங்கப்பட்டு வந்துள்ளது,” என்று திரு சுதிர்பாபு விளக்கினார்.
அத்துடன், அக்கும்பலைச் சேர்ந்த மருத்துவர்கள் சிலர் ஹைதராபாத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளிலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டது விசாரணையில் தெரியவந்ததாகக் காவல்துறை கூறியது.

