கோல்கத்தா: தங்குவிடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்த சம்பவம், கோல்கத்தாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒரு பெண்ணும் இரு குழந்தைகளும் அடங்குவர் என கோல்கத்தா காவல்துறை தலைவர் மனோஜ் வர்மா ஏஎஃப்பியிடம் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோல்கத்தாவில் மெச்சுவா பழச்சந்தை அருகே அந்த விடுதி இயங்கி வந்தது.
அங்கு மொத்தம் 47 அறைகள் இருந்ததாகவும் அவற்றில் 88 விருந்தினர்கள் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சன்னல்களை உடைத்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள், பலரைக் காப்பாற்றி மீட்டனர். பலர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தீ மூண்டதை அடுத்து, விடுதிக்குள் சிக்கிக்கொண்ட பலர் சன்னல்கள் வழியாகத் தப்பிச்செல்ல முயன்றனர் என்றும் மேலிருந்து கீழே விழுந்தவர்களில் சிலர் படுகாயம் அடைந்தனர் என்றும் பிடிஐ முகைமை செய்தி தெரிவிக்கிறது.
அவ்வாறு குதித்தவர்களில், குறைந்தபட்சம் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக, தி டெலிகிராஃப் ஊடகம் குறிப்பிட்டது.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) விடுதியில் திடீரென தீ மூண்டது. என்ன நடந்தது என்பதை ஊகிப்பதற்குள் தீ மளமளவென பரவியதை அடுத்து, அங்கு தங்கியிருந்த அனைவரும் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பினர்.
தொடர்புடைய செய்திகள்
கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க விடுதி ஊழியர்களும் அங்கு தங்கியிருந்தோரும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்நிலையில், தகவல் அறிந்து பத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
விடுதி முழுவதும் கறும்புகை காணப்பட்டதால், தீயணைப்பு வீரர்களால் உடனடியாக உள்ளே செல்ல முடியவில்லை.
வெளியில் இருந்தபடி, ஏணிகளைப் பயன்படுத்தி ஐந்தாம் தளம் வரை சென்று, பின்னர் சன்னல்களை உடைத்து உள்ளே சென்றனர்.
இந்த விபத்து குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபுவும் அவரது குழந்தைகளும் சிக்கியதாகக் தகவல் வெளியான நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

