‘தஞ்சாவூர் மண்ணு எடுத்து’ பாடலைப் பாடிய கிருஷ்ணராஜ் காலமானார்

‘தஞ்சாவூர் மண்ணு எடுத்து’ பாடலைப் பாடிய கிருஷ்ணராஜ் காலமானார்

படம்: இந்துதமிழ்

22 Oct 2026 - 5:34 pm

1 mins read

தமிழ்த் திரையுலகில் 90களின் காலகட்டத்தில் கிராமத்து மணமும் கிராமிய இசையும் நிறைந்த பாடல்கள் மூலம் மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ்.

பருத்திவீரன், அருணாச்சலம், காதல் கோட்டை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் 300க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவர், வியாழக்கிழமை (அக்டோபர் 22) காலை தமது 75வது வயதில் காலமானார்.

இசையமைப்பாளர் தேவாவின் இசைக்குழுவில் இணைந்து பணியாற்றி வந்த கிருஷ்ணராஜ், ‘வெள்ளரிக்கா.. பிஞ்சு வெள்ளரிக்கா’, ‘காத்தடிக்குது காத்தடிக்குது’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’ போன்ற பாடல்கள் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன.

1997ஆம் ஆண்டில் வெளியான ‘பொற்காலம்’ படத்தில் அவர் பாடிய ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ என்ற பாடல், கேட்போரின் மனதை உருக்கும் உணர்ச்சிபூர்வமான பாடலாக அமைந்தது.

அப்பாடலுக்கு அமைந்த மற்றொரு சிறப்பு என்னவென்றால், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனின் இறுதிச் சடங்கு நிகழ்வில், அவரது விருப்பப் பாடலான அப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.

மறைந்த பாடகர் கிருஷ்ணராஜின் இறுதிச் சடங்கு அக்டோபர் 23ஆம் தேதி அவரது சொந்த ஊரான சேலத்தில் நடைபெறவுள்ளன.

குறிப்புச் சொற்கள்