மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகளிடமிருந்து மாநில அரசாங்கம் எடுத்துக்கொண்ட நிலங்களை அவர்களிடமே திருப்பித் தர சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர மாநில அரசாங்கம் 4,949 ஏக்கர் விவசாய நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க தற்போது நடப்பில் இருக்கும் நில வருவாய் சட்டத்தில் (land revenue code) மாற்றங்களைச் செய்துள்ளது. அரசுக்கான நிலுவைத் தொகை, வரி உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்தாததால் அந்நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
மகாராஷ்டிர அரசாங்கத்தின் இந்த முடிவால் அம்மாநிலத்தில் உள்ள 973 விவசாயிகள் பலனடைவர் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விவசாயிகளிடம் விவசாய நிலங்களைத் திருப்பித் தர வழிவகுக்கும் மகாராஷ்டிர நில வருவாய் சட்டம் 1966ல் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட விவசாய நிலங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில் இருக்கின்றன. அதன்படி 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவை ஏலத்துக்கு விடப்பட்டு பெறவேண்டிய தொகையும் அதற்கான வட்டியும் மீட்டுக்கொள்ளப்படும். அதற்கும் மேல் வரும் தொகையை மாநில அரசாங்கம், விவசாயிகளிடமே திருப்பித் தரும்.
அந்த நடைமுறையின்வழி நீண்டகாலமாக மாநில அரசாங்கம் அதிக வருவாய் ஈட்டவில்லை. அதன் காரணமாக நில வருவாய் சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய மாநில அமைச்சரவை முடிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றங்களின்கீழ் அந்நிலங்களுக்கு அரசாங்கம் விதிக்கும் மதிப்பில் கால் பங்கு தொகையைத் தந்து விவசாயிகள் அவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.
கடன் சார்ந்த சவால்கள், வறட்சி போன்ற பிரச்சினைகளால் வரி செலுத்தமுடியாமல் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு இந்தச் சட்ட மாற்றங்கள் நிம்மதி தரும் என்று மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார்.