ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் எல்லை மாவட்டங்களான பூஞ்ச், ராஜௌரி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) இடைவிடாது பெய்த கனமழையினால் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
அதில், இதுவரை 12 பேர் உயிரிழந்தனர். மேலும், பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன், ஏராளமான வீடுகளும் சாலைகளும் உள்கட்டமைப்பு வசதிகளும் பலத்த சேதமடைந்துள்ளன.
பூஞ்ச் மாவட்டத்தின் சுரான்கோட் வட்டாரத்திலுள்ள லோயர் முர்ரா பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு நிலச்சரிவு இடிபாடுகளுக்குள் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பல குடும்பங்கள் வீடுகளுக்குள் சிக்கிக்கொண்டன; பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 11 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பர்வேஸ் அகமது உறுதிப்படுத்தினார்.
ராஜௌரி நகரின் பேருந்து நிலையத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததால் பல கட்டடங்கள் நீரில் மூழ்கின; பல தனியார், பொது வாகனங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தன.
அங்குப் பெண் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட எல்லை மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, ராணுவம், தேசியப் பேரிடர் மீட்புப் படை ஆகியவை இணைந்து பேரளவிலான மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
புதுடெல்லியில் இருந்த அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா, தமது பயணத்தைச் சுருக்கிக்கொண்டு நிலவரத்தை நேரில் கண்காணிக்க ஜம்மு திரும்பியுள்ளார்.
மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முதல் முன்னுரிமை என்று கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றார்.
அம்மாநிலத் துணை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் அதிகாரிகளை விழிப்பு நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை நிறுத்திவைக்கப்பட்டது. யாத்திரிகர்களின் பாதுகாப்புக் கருதி அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 23ஆம் தேதி வரை ஜம்மு காஷ்மீரின் பிர் பஞ்சால் உள்ளிட்ட பகுதிகளில் மேகவெடிப்பு, கடுமையான இடிமின்னலுடன் கூடிய மிகக் கனமழை, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஆகியவை ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.

