இம்பால்: இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மணிப்பூர் மாநிலத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்ச் 28, 29 ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு கைது நடவடிக்கைகளில் பிடிபட்ட நால்வரில் மூவர், தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
தனிநபர்கள் சிலரது தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றிப் பயன்படுத்தி கைபேசிகளுக்கான ‘சிம்’ அட்டைகளை விற்றதன் பேரில் வாஹெங்பம் அஜித் மீத்தேயை காவல்துறையினர் கைது செய்தனர்.
மற்றொரு சோதனையில் அதிகாரிகள், காங்லெய்பாக் புரட்சிக் கட்சியைச் சேர்ந்த 37 வயது நிங்தெளஜம் போபாய் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். காங்லெய்பாக் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த 27 வயது சனாசம் சோனமிட் சிங்கும் கைது செய்யப்பட்டார்.
குற்றவியல் காரணங்களுக்காக சிம் அட்டைகளைப் பயன்படுத்தி வருவது மணிப்பூரில் அக்கறைக்குரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
கடத்தல், அச்சுறுத்தல், கொள்ளை போன்றவற்றுக்காக கிளர்ச்சியாளர்கள் இந்த அட்டைகளைப் பயன்படுத்தக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இதன் தொடர்பில் காவல்துறையினர் பிப்ரவரி முதல் தீவிரச் சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.
சிம் அட்டைகளை விற்கும் இணையக்கடைகள் அதற்கான நெறிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றும்படி காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

