ஹைதராபாத்: நவராத்திரி பண்டிகைக்காக மாமியார் வீட்டுக்கு வந்த மருமகனுக்கு நூறு உணவு வகைகளுடன் பரிமாறப்பட்ட விருந்து தெலுங்கானாவில் பேசுபொருளாக ஆகியுள்ளது.
தெலுங்கானாவைச் சேர்ந்தவர் சுரேஷ், சிந்து ஆகிய இருவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.
உடனடியாக நவராத்திரிப் பண்டிகை வந்துவிட்டதால் மருமகனை விருந்துக்கு அழைத்தனர் பெண் வீட்டார். நூறு சுவையான உணவு வகைகளுடன் விருந்து பரிமாறப்படும் எனப் பெண் வீட்டார் உறுதி அளித்தனர்.
ஒரு உணவு வகை குறைந்தாலும்கூட தனக்கு ஒரு பவுன் தங்கம் கொடுக்க வேண்டும் என்று மருமகன் சுரேஷும் விளையாட்டாய் நிபந்தனை விதிக்க, அண்மையில் விருந்து நிகழ்வு நடைபெற்றது.
அப்போது 60 வகையான இனிப்பு வகைகள், முறுக்கு, சீடை என 30 அரிசி மாவு வகைகள், 10 வகையான பொறியல் என மருமகனுக்காக பிரம்மாண்ட விருந்தைத் தயார் செய்திருந்தார் சிந்துவின் தாயார்.
தாம் கூறியபடி சமையல் அமைந்திருந்தாலும், மருமகனுக்காக ஒரு பவுன் தங்கத்தையும் பரிசாக அளித்தனர் சிந்துவின் குடும்பத்தினர்.