பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவுக்கு பிணை வழங்க பெங்களூரு நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ரன்யா தமக்குப் பிணை வழங்க வேண்டும் என்று பெங்களூரு பொருளியல் குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அந்த மனு வெள்ளிக்கிழமை(மார்ச் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது ரன்யா ராவ் தரப்பில், இவ்வழக்கின் காரணமாகக் கடும் மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதால் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காகப் பிணை கோரப்பட்டது.
அப்போது, வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின்னர் நீதிமன்றம் ரன்யாவின் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் பெங்களூரு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் விசாரணையில் நடிகை ரன்யா தங்கக் கடத்தலை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ‘யூ டியூப்பில்’ பார்த்துத் தெரிந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் துபாயில் சொத்து விற்பனை தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் அதனால் அங்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டதாகவும் கூறினார்.
தமது நண்பர் தருண் ராஜூ கேட்டதால் முதல் முறையாக துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்தேன். துபாயில் எந்த அனைத்துலக கும்பலுடனும் எனக்குத் தொடர்பு இல்லை. துபாய் விமான நிலையத்தில் ஒருவர் எனக்கு 12 தங்கக் கட்டிகளைக் கொடுத்தார். அதனை எனது தொடையில் மறைத்துக் கொண்டுவந்தேன்’‘என வாக்குமூலம் அளித்துள்ளார்.
ரன்யாவுக்கு அனைத்துலக தங்கக் கடத்தல் கும்பல் மற்றும் பெங்களூருவின் முக்கிய நபர்களுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நட்சத்திர விடுதி உரிமையாளர் தருண் ராஜ் கைது செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
கர்நாடகக் காவல்துறை ஆணையர் ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் துபாயிலிருந்து 14.8 கிலோ கிராம் தங்கம் கடத்தி வந்ததாகக் கடந்த 3ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.