புதுடெல்லி: இந்திய மாணவர்கள் சிறைக்குச் செல்வது குறித்து அஞ்ச வேண்டாம் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறினார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, அமிர்தசரஸ் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், மாணவர்கள் முக்கியமா அல்லது திறமையற்ற, தோல்வியடைந்த ஒருவர் அமைச்சராக நீடிக்க வேண்டுமா என்பதை பிரதமர் மோடி விரைவில் முடிவு செய்யவேண்டும் என்றார்.
‘நீட்’, சிபிஎஸ்இ’ தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலகவேண்டும் என சிஜேபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
டெல்லி, புனே, லக்னோ என நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்திய சிஜேபி, அடுத்து பங்சாப்பின் அமிர்தசரசில் களமிறங்கியது.
தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக சிஜேபி அறிவித்திருந்த நிலையில், இதில் பங்கேற்க ஏராளமான மாணவர்களும் இளையர்களும் திரண்டனர்.
அப்போது பேசிய சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே, ஜூன் 20ஆம் தேதி டெல்லிக்குச் சென்று, தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை மாணவர்கள் அனைவரும் அங்கேயே முகாமிடப்போவதாகத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியபோது, சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தாம் கருதியதாக அவர் தெரிவித்தார்.
“ஆனால் அவ்வாறு நடக்கவில்லை, மாணவர்கள் அஞ்சவேண்டாம். மாணவர்களுக்கு நீதி வழங்குவதே முக்கியமான நோக்கம். வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் தொடரக்கூடாது,” என்றார் அபிஜீத் தீப்கே.
தொடர்புடைய செய்திகள்
பஞ்சாப் மாநிலத்தின் ஆதரவு இல்லாமல் இந்தியாவில் எந்தப் போராட்ட இயக்கமும் வெற்றிபெற முடியாது என்று குறிப்பிட்ட அவர், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் பஞ்சாப்பில் இருந்துதான் தொடங்கியதுர் என்றார்.
அப்போராட்டத்தில் தானும் பங்கேற்றதாகக் குறிப்பிட்ட அவர், முந்தைய இந்திய அரசுப் போராட்டங்களை எவ்வாறு அவதூறாகச் சித்திரித்தது என்பதை அப்போது நாட்டு மக்கள் கண்கூடாகப் பார்த்ததாகத் தெரிவித்தார்.
ஜூன் 20ஆம் தேதி கல்வி அமைச்சருக்கு எதிராக டெல்லியில் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு முன்பு, பெங்களூருவில் மேலும் சில ஆர்ப்பாட்டங்களை நடத்த சிஜேபி திட்டமிட்டுள்ளது.

