குஷிநகர்: உத்தரப் பிரதேசத்தில் பயங்கரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் சந்தேக ஆடவரின் தந்தை, “தன் மகன் தவறு செய்திருந்தால் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் படையும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவும் இணைந்து நடத்திய அதிரடிச் சோதனையில், ரிஸ்வான் என்ற இளைஞர் குஷிநகரில் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து அவரது தந்தையும் ஓய்வுபெற்ற அரசு ஊழியருமான நிஜாமுதீன் கூறுகையில், “நாங்கள் இந்த நாட்டு மக்கள்; எங்கள் நாட்டை நேசிக்கிறோம். என் மகன் தவறு செய்திருந்தால், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும்,” என்றார்.
வெடிபொருள்கள் சட்டத்தின்கீழ் தேடப்பட்டு வந்த ரிஸ்வான், அனைத்துலக அளவில் சிலருடன் தொலைபேசியில் பேசியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் தற்போது டெல்லியில் வைத்து ரிஸ்வானிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவருக்குப் பணம் எங்கிருந்து வருகிறது? யாருடன் தொடர்பில் இருந்தார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

