தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளம் தொழில்முனைவோரின் கனவுகளுக்கு சிறகுகளை வழங்குவோம்: மோடி

2 mins read
ea3ee1ad-b4ff-409f-b4eb-5c5e85dfcb31
‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள இளம் தொழில்முனைவோரின் கனவுகளுக்குச் சிறகுகளை வழங்க வேண்டும் என்றும் அதற்கு மக்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் (சுதேசி) பொருள்களை வாங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன் மூலம், உள்நாட்டு மக்களின் குரலாக மாறுவோம் என்றும் அவர் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை வாங்குவதற்கு மக்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும். அவ்வாறு செய்வது ஒரு குடும்பத்துக்கு நம்பிக்கையைத் தருவதுடன், ஒரு கைவினைக் கலைஞரின் கடின உழைப்பைப் போற்றுவதாகவும் அமையும்.

மேலும், இளம் தொழில்முனைவோரின் கனவுகளுக்குச் சிறகுகளையும் வழங்கும் என்றார் மோடி.

தற்போது நவராத்திரி வேளையில் மக்கள் சக்தியை வழிபடுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்திய நாட்டின் மகள்கள் வணிகம் முதல் விளையாட்டு வரை, கல்வி முதல் அறிவியல் வரை அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்து வருவதாகப் பாராட்டு தெரிவித்தார்.

“இந்த முழு பருவமும் நாட்டில் பண்டிகைக் காலமாக இருக்கும். எதிர்வரும் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நாட்டைத் தன்னிறைவு பெறச் செய்வதற்கான பாதை, சுதேசி பொருள்களை வாங்குவதன் மூலம் மட்டுமே உருவாகும்.

“பண்டிகைக் காலத்தில் தூய்மை என்பது வீடுகளுக்கு மட்டுமல்லாமல், சாலைகள், சுற்றுப்புறங்கள், சந்தைகள், கிராமங்கள் வரை நீட்டிக்கப்பட வேண்டும்,” என்றார் பிரதமர் மோடி.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங், பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோரின் பிறந்தநாள் என நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, இதனால் தனது 126வது வானொலி நிகழ்ச்சி கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது என்றார்.

தியாகி பகத் சிங்கிற்கு மரியாதை செலுத்திய திரு மோடி, பகத்சிங் ஒவ்வொரு இந்தியருக்கும் குறிப்பாக, நாட்டின் இளையர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் சக்தி என்றார்.

“நாட்டின் நலனுக்காக தூக்கிலிடப்படுவதற்கு முன்பு, பகத் சிங் தனது தோழர்களையும் தன்னையும் போர்க் கைதிகளைப் போல் நடத்துமாறு ஆங்கிலேயர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

“பகத் சிங், தான் தூக்கிலிடப்படுவதை விரும்பாமல், துப்பாக்கித் தோட்டா துளைத்து தன் உயிர் பிரிய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இது அவரது அசாத்திய துணிச்சலுக்கு சான்றாகும்,” என்றார் மோடி.

குறிப்புச் சொற்கள்