புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளரான லெக்ஸ் பிரிட்மென் வலையொளி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், எலோன் மஸ்க் உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) சுமார் மூன்றரை மணிநேரம் நடந்த இந்த வலையொளியில் தமது அரசியல், வாழ்க்கை குறித்த அனுபவங்களை மோடி பகிர்ந்துள்ளார்.
அதில், தனது சிறுவயதில் வறுமையுடன் போராடியது சவாலாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் உடனான உறவு குறித்துப் பேசிய பிரதமர் மோடி, அமைதியை ஏற்படுத்துவதற்கான தனது ஒவ்வொரு முயற்சியும் விரோதத்தையும் துரோகத்தையும் சந்தித்ததாகத் தெரிவித்தார்.
சீனாவைப் பற்றி கேட்டபோது, இந்தியாவுடன் சீனாவுக்குப் போட்டி இருக்க வேண்டும், மோதல் இருக்கக் கூடாது என்றார் அவர்.
ரஷ்யா - உக்ரேன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினை உள்ளிட்டவை குறித்து பிரிட்மென் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, “ஒரு காலத்தில் அனைத்துலக அமைப்புகள் பலம் மிக்கவையாக இருந்தன. ஆனால், தற்போது அவற்றால் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ள முடியவில்லை. ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகள் தங்களது கடமையைச் சரிவர செய்யவில்லை,” என பதிலளித்தார்.
“வளர்ச்சியை மையப்படுத்திய அணுகுமுறைதான் உலக நாடுகளுக்குப் பலன் அளிக்கும். தங்களது அதிகாரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்கிற எண்ணம் பலன் தராது,” எனக் கூறினார்.