புதுடெல்லி: பிரபல தொழிலதிபர் அதானிக்குச் சொந்தமான அதானி குழுமத்துக்கு நிதி வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) மூலம் இந்த நிதியை முறைகேடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் குற்றஞ்சாட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில் புதிய பேசுபொருளாக மாறியுள்ளது.
மொத்தம் ரூ.33,000 கோடி தொகையை வழங்குவதே இந்திய அரசின் திட்டம் என ‘வாஷிங்டன் போஸ்ட்’ தெரிவித்தது.
இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை அறிக்கை ஒன்றையும் அது வெளியிட்டது. கடந்த 2023ஆம் ஆண்டு ‘ஹிண்டன்பெர்க்’ நிறுவனம் அதானி குழுமம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டியதை, இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியமான ‘செபி’ திட்டவட்டமாக மறுத்தது.
மேலும், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு அதானி குழுமம் சார்பில் பெருந்தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும் எழுந்த புகார் தொடர்பான வழக்கின் விசாரணை அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதனால் அதானியின் குழுமம் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவந்த நிலையில், அதை மீட்க இந்திய நிதி அமைச்சு, நிதிச் சேவைகள் துறை, ‘எல்ஐசி’ ஆகிய முத்தரப்பினர் இணைந்து ரகசியத் திட்டம் தீட்டியதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதற்கான முதலீட்டு வியூகம் மத்திய நிதியமைச்சின் ஒப்புதலைப் பெற்றுவிட்டது என்றும் குறிப்பிட்டு, அதற்கான ஆவணங்களை அந்த ஊடகம் சுட்டிக்காட்டி உள்ளது.
கடந்த மே மாதம் அதானி குழுமம், கடன் சுமையில் இருந்து விடுபட அக்குழுமம் வெளியிட்ட ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை ‘எல்ஐசி’ வாங்கியது. இதுபோன்ற மேலும் பல முதலீட்டுத் திட்டங்கள் மூலம் ‘எல்ஐசி’யின் ரூ.33,000 கோடியை அதானி குழுமத்துக்கு முறைகேடாக வழங்குவதே இந்திய அரசின் திட்டம் என வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, ‘எல்ஐசி’யில் பாலிசிதாரர்களின் சேமிப்பு தவறான வழியில் பயன்படுத்தப்படுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.
“பிரதமர் மோடியும் அதானியும் சேர்ந்து (மோதானி) மோசடி செய்தது குறித்து ஊடகங்களில் வந்த செய்திகள் மூலம் தெரியவந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார்.

