இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர் போக்குவரத்து வாகனத்தை ஓட்டலாம்

1 mins read
dfa64c57-649e-46ca-be22-2252b6e51067
இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் (எல்எம்வி) வைத்திருப்பவர், 7,500 கிலோ எடை கொண்ட போக்குவரத்து வாகனத்தை ஓட்டலாம்.  - கோப்புப் படம்: இணையம்

புதுடெல்லி: இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் (எல்எம்வி) வைத்திருப்பவர், 7,500 கிலோ எடை கொண்ட போக்குவரத்து வாகனத்தை ஓட்டுவதற்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் படி, இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் கார், ஜீப், டாக்சி, ஆட்டோ ரிக்‌ஷா போன்ற இலகுரக தனியார் வாகனங்களை மட்டுமே இயக்க முடியும். மேலும், இந்த உரிமம் பெற்றவர்கள் வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்பட்டால், காப்பீடு வழங்கும் உரிமைக்கோரலில் சட்டச்சிக்கல்கள் இருந்து வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி நடந்த விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் வாதிட்ட ஆர்.வெங்கடரமணி, மோட்டார் வாகனங்கள் சட்டம் 1988ன் திருத்தம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் மட்டுமே இதை நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

சட்டத் திருத்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், இந்த வழக்கு புதன்கிழமை (நவம்பர் 6) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வணிக வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் 7,500 கிலோ எடைகொண்ட போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். எல்எம்வி உரிமம் உள்ளவர்கள் காப்பீடு கோர இந்தத் தீர்ப்பு உதவும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்