அமராவதி: மதுவால் ஏற்படும் நோய்களில் எண்ணிக்கை ஆந்திராவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இத்தகைய நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால், கல்லீரல், சிறுநீரகங்கள், நரம்பு மண்டலம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், கடந்த 2019 முதல் 2024 வரை இத்தகைய நோய்களால் பாதிக்கப்படுவோர் குறித்து ஆந்திராவில் உள்ள டாக்டர் என்டிஆர் வைத்திய சேவா அறக்கட்டளை ஓர் ஆய்வு மேற்கொண்டது.
அதில், இத்தகைய நோய் பாதிப்பு அதிகரித்து, நோயாளிகளின் எண்ணிக்கையும் நாள்தோறும் உயர்ந்து வருவதும் தெரிய வந்துள்ளது.
“கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், மது சார்ந்த கல்லீரல் நோயால் மட்டும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“கடந்த 2019ஆம் ஆண்டில் இக்குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,026 ஆக இருந்தது. தற்போது 29,639 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, 100%க்கும் மேல் மதுவால் கல்லீரல் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
“இதனால் இவர்களுக்கான சிகிச்சை செலவு ரூ.68 கோடியில் இருந்து ரூ.141 கோடியாக உயர்ந்துவிட்டது,” என்று அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இதேபோல் மது நுகர்வு தொடர்பான நரம்பு மண்டல பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 1,276லிருந்து 12,663ஆக பலமடங்கு அதிகரித்துவிட்டது.
மதுசார்ந்த சிறுநீரகப் பாதிப்பால் 2019ஆம் ஆண்டில் 49,000 பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 90,000ஆக அதிகரித்துவிட்டது.
இதன் காரணமாக, இந்த நோய்களுக்காக அளிக்கப்படும் சிகிச்சைகள் ரூ.600 கோடியில் இருந்து ரூ.940 கோடியாக அதிகரித்துள்ளது என அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.